Show all

நீதிமன்றங்கள் தலையிட முடியாத வகையில் சமூக நீதிக் கொள்கை: ராமதாஸ்

நீதிமன்றங்கள் தலையிட முடியாத வகையில் சமூக நீதிக் கொள்கை உருவாக்கப்பட்டு, அதற்கு அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு தரப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், குஜராத் மாநிலத்தில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் செல்லாது என்று அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டத்தில் இடமில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர். பொதுவாக சமூக நீதிக்கு ஆதரவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது, அதற்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை என்று கூறி ரத்து செய்வது நீதிமன்றங்களின் வழக்கமாக மாறி வருகிறது. இந்தப் போக்கு நியாயமானதல்ல. சமூக நீதி சார்ந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் அளித்த தீர்ப்புகளை ஆராய்ந்தால், இட ஒதுக்கீட்டை மறுப்பதற்கு அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்திய அளவுக்கு இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கு பயன்படுத்தவில்லை என்பதை உணர முடியும். அரசியலமைப்பு சட்டப்படி பட்டியலின, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 65 ஆண்டுகளும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 25 ஆண்டுகளும் ஆகின்றன. இருப்பினும் அச்சமுதாயங்களில் உள்ள அனைவரும் அதனால் பயனடைந்துவிடவில்லை. இந்தச் சூழலில் இட ஒதுக்கீட்டுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஒரு பிரிவினர் துடிப்பதும், அவர்களின் நிலைப்பாட்டுக்கு வலுசேர்ப்பது போல நீதிமன்றங்கள் செயல்படுவதும் ஆரோக்கியமல்ல. இது சமூக நீதிக்கு எந்தவகையிலும் உதவாது. எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால், வே.ஆனைமுத்து தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல முன்னேறிய வகுப்பினர் உட்பட அனைத்து சாதியினருக்கும் 100 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மேலும், சமூக நீதியைத் தீர்மானிக்க வேண்டியது சமூகங்களும், சமூகங்களால் தேர்வு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளும்தானே தவிர நீதிமன்றங்கள் அல்ல. எனவே, நீதிமன்றங்கள் தலையிட முடியாத வகையில் சமூக நீதிக் கொள்கை உருவாக்கப்பட்டு, அதற்கு அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு தரப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத உச்சவரம்பை நீக்குதல், நாடு முழுவதும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் 100 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல், கிரிமீலேயரை நீக்குதல், பதவி உயர்விலும் இட ஒதுக்கீட்டை நீடித்தல் ஆகியவை சமூக நீதிக் கொள்கையின் அங்கங்களாக இருக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.