Show all

தமிழ் இலக்கியங்கள் கொண்டாடும் இனிய பறவை! உலக சிட்டு குருவி நாள் விழா இன்று

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று உலகச் சிட்டுக் குருவிகள் நாள். சிட்டுக் குருவி இனத்தை அழியாமல் காக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இன்றைய நாளை கடந்த ஏழு ஆண்டுகளாக உலக ஊர்க்குருவிகள் நாளாகக் கொண்டாடி அவற்றைக் காக்கப் போராடி வருகின்றனர். இதனை உணர்த்தும் வகையில் பல நாடுகள் அஞ்சல் தலைகள் வெளியிட்டுப் பெருமைப் படுத்தியுள்ளன.

சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன . இவற்றின் கூடுகள் கிண்ண வடிவில் இருக்கும். இவை குளிர் காலத்தில் கூட்டமாக ஒரு புதரில் ஒன்று சேர்ந்து இரவைக் கழிக்கின்றன.

சிட்டுக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வௌ;ளை நிறத்தில் இருக்கும். ஆண், பெண் இரண்டுமே முட்டைகளையும், இளம் உயிரிகளையும் பாதுகாத்து வளர்க்கின்றன. குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன; பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.

தமிழ் இலக்கியங்களில் சிட்டுக் குருவியைப் பற்றி பல செய்திகள் காணக்கிடக்கின்றன. சிலப்பதிகாரத்தில் ‘குருவி ஒப்பியும் கிளி கடிந்து குன்றத்து’ என்று குன்றக் குரவையில் மலை மேல் திரிந்த குருவியையும் கிளியையும் இளங்கோவடிகள் பாடியுள்ளார்.

புறாநானூற்றில் உள்ள குரீஇ என்ற சொல்லே மருவி குருவி என்றானது என்பர். ‘குன்றத்து இருந்த குரீஇ இனம் போல்’ என்ற புறநானூற்றுப் பாடலிலும் ‘மனையுறை குரீஇக் களை கனல் சேவல்’ என்ற பாடலிலும் கழுத்தில் கறுப்பினை உடைய ஆண்குருவி, வீட்டிலேயே செல்லப் பறவையாக வாழ்வதைக் கூறுகிறது. ‘தூக்கலாம் குரீஇத் தூங்கு கூடு’ என்ற புற நானூற்றுப் பாடலிலும் தூக்கணாங்குருவியையும் அதன் கூட்டையும் சுட்டுகிறது.

‘எண்ணரும் குன்றில் குரீஇ இனம் போன்றனவே’ என்ற களவழி நாற்பதும் யானைமேல் தைத்த அம்புகளுக்கு, மலை மீது தங்கிய குருவிகள் உவமை ஆக்கப்பட்டுள்ளன. ‘உள்ளிறைக் குரீஇக் காரணற் சேவல்’ என்ற நற்றிணைப் பாடலும் நெல்லின் அரிசி ஆர்ந்து தன் புறப்பெடையோடு வதியும் குருவியைக் காட்டுகிறது.  ‘ஆம்பல் பூவின் சம்பல் அன்ன கூம்பிய சிறகர் மனை உரைகுரீஇ’ என்ற குறுந்தொகைப் பாடலில், ஆம்பல் மலரின் சாம்பல் நிறத்தை ஒத்த குவிந்த சிறகுகளை உடைய வீட்டுக் குருவிகள் முற்றத்தில் உலரும் தானியங்களைத் தின்று, பொது இடத்தின் கண் உள்ள எருவினது நுண்ணிய பொடியைக் குடைந்து விளையாடி, வீட்டில் இறப்பில் தம்முடைய குஞ்சுகளோடு தங்கியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

‘குருவிசேர் வரை போன்ற குஞ்சரம்’ என்ற சீவக சிந்தாமணி யானை மேல் பல அம்புகள் உள்ளதை மலை மேல் குருவிகள் உள்ளதற்கு உவமையாகக் கூறுகிறது.

‘குருவி சேர் குன்றம் ஒத்து’ என மேருமந்திரமும் இந்தக் குருவி உவமையைக் காட்டுகிறது. 

சிட்டுக்குருவி இனம் குறைந்து கொண்டு வருகின்றன. பல உயிரினங்கள் அழிவுக்கு, மக்கள் தொகை பெருக்கமே காரணமாகும். செல்பேசி அலைவரிசை காரணமாக சிட்டுக் குருவிகள் குறைந்து வருகின்றன என்றும் சொல்லப் படுகின்றன. சிட்டுக் குருவிகளை பாதுகாக்கும் முகமாக இயற்கையைப் பேணுவோம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,732.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.