Show all

கூகுள்தரைப்பட புதிய அனுபவங்கள்! அசைவூட்டு பொம்மைகளைக் கொண்டு வழி காட்டும்

30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கூகுள் தரைப்படம் செயலியில் 'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்' கொண்டு இயங்கும் புதிய அம்சங்கள் புதிய மேம்படுத்தல்; மூலம் செயலியில் சேர்க்கப்பட இருக்கின்றன. 

அந்த வகையில் கூகுள் தரைப்படம் செயலியில், காட்சி நிலைப்படுத்தல் அமைப்பு எனும் உதவியோடு இயங்கும் சுவையான அம்சம் விவரிக்கப்பட்டது. காட்சி நிலைப்படுத்தல் அமைப்பு உங்களது மிடக்குப்பேசி படக்கருவி உதவியுடன் கூகுள் தரைப்படச்  செயலியில் இணைந்து நீங்கள் முகவரி தெரியாத இடங்களில் பயணிக்கும் போது துல்லியமாக வழிகாட்டும்.

இத்துடன் கூகுள் தரைப்பட இடைமுகம் படக்கருவியுடன் இணைந்து வேலை செய்யும் படி உருவாக்கப்படுகிறது. இதனால் திசை தெரியாத இடங்களில் படக்கருவியைக் காண்பித்தால் அம்பு குறி மூலம் நீங்கள் செல்ல வேண்டிய திசையை உங்களுக்கு காண்பிக்கும். 

இந்த அம்சம் நீங்கள் செல்லும் தெருக்களில் உள்ள கடைகளின் விளம்பர பலகைகளை படக்கருவி மூலம் அறிந்து கொண்டு நீங்கள் செல்ல வேண்டிய வழியை காண்பிக்கும். இத்துடன் அசைவூட்ட பொம்மைகளையும் தரைப்படச் செயலியில் சேர்ப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூகுள் அதிகாரி தெரிவித்துள்ளார். 

இந்த பொம்மை நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். வழக்கமாக நீல நிற அம்பு குறி உங்களுக்கு இதுவரை வழிகாட்டிய நிலையில், இனி கணினியில் உருவான வித்தியாசமான பொம்மைகள் வழிகாட்டும். இது புதுவித அனுபவத்தை வழங்குவதோடு முகவரி தெரியாத இடங்களில் எண்ணிமத் துணையாக விளங்கும். 

இதுமட்டுமின்றி கூகுள் தரைப்படம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட இருக்கின்றன. இவை தரைப்பட பயன்பாட்டை முற்றிலும் மாற்றுவதோடு, புதிய அனுபவத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் தரைப்படம் சேவையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சங்கள் வரும் மாதங்களில் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,786. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.