Show all

ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுபொறி சேவை நிறுத்தப்படலாம்! கூகுள் நிறுவனம் எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் கூகுள் சேவையை முடக்கும் வகையாக வெளியிட்டுள்ள, சட்ட முன்வரைவை சட்டமாக்கினால், ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுபொறி சேவை நிறுத்தப்படலாம்; என்பதாக கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

09,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஆஸ்திரேலியாவில் கூகுள், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தங்களது தளங்களில் உள்நாட்டு செய்தி நிறுவனங்களின் செய்தி உள்ளடக்கங்களை பயன்படுத்துவதற்கு, சம்மந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு, உரிய பணம் வழங்க வேண்டும், தவறினால் மில்லியன் டாலர் கணக்கில் அபராதம் செலுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு ஒரு சட்டமுன்வரைவைக் கொண்டுவந்துள்ளது. இந்த சட்டமுன்வரைவைச் சட்டமாக்குவதற்கு கூகுள் நிறுவனம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுபொறி சேவை நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் கூகுள் நிர்வாக இயக்குனர் மெல் சில்வா கூறுகையில், “ஊடகங்களுக்கு பணம் வழங்க கூறும் இந்த சட்டமுன்வரைவு சட்டமாக மாறினால் ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுபொறியின் சேவையை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை. இது எங்களுக்கு மட்டுமல்ல ஆஸ்திரேலிய மக்களுக்கும், ஊடக பன்முகத்தன்மை மற்றும் ஒவ்வொரு நாளும் எங்கள் தயாரிப்புகளை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கும் ஒரு மோசமான விளைவாக இருக்கும்” என கூறினார்.

இது குறித்து ஆஸ்திரேலிய தலைமைஅமைச்சர் ஸ்காட் மாரிசன் கூறுகையில், “நாங்கள் அச்சுறுத்தல்களுக்கு பதில் அளிப்பதில்லை. ஆஸ்திரேலியாவில் நீங்கள் செய்யக்கூடிய பாடுகளுக்கு நாங்கள் விதிகளை உருவாக்குகிறோம். இது எங்கள் நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்படுகிறது” என்றார்.

உலகின் 108 மொழிகளில் செய்தி, தகவல், சேவை, வணிக, நிருவாக சமத்துவம் போணுவதோடு- தமது வருமானத்தில் உரிய பங்களிப்பும் வழங்கிவரும் கூகுள் நிறுவனத்திற்கு இடர்பாட்டை உருவாக்கும் வகையான, இந்தச் சட்ட முன்வரைவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதே ஆஸ்திரேலிய அரசுக்கு நமது அன்பான வேண்டுகோள். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.