Show all

நான்கு தமிழர்கள்! வெற்றி பெருமிதம் கொள்ள இருவர். நாணித் தலை கவிழ இருவர்

30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெனால்டு ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இந்த இருவரின் சந்திப்பு நடக்குமா... நடக்காதா என உலகமே  ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது. 

இரு தலைவர்களின் சந்திப்புக்காக சிங்கப்பூர் அரசு  ரூ.100 கோடி வரை செலவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் உலகின் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்படும் நபர். வடகொரிய அதிபருக்கோ சிறு சங்கடம் ஏற்பட்டால் கூட சிங்கப்பூருக்கு அவப் பெயர் ஏற்பட்டு விடும். அதனால், ஒவ்வொரு விசயத்திலும் சிங்கப்பூர் அரசு மிகுந்த சிரமத்தை எடுத்தது. 5,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். உலகம் முழுவதும் இருந்து 2,500 இதழியலாளர்கள் சிங்கப்பூரில் குவிந்தனர். அவர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடங்களையும் சிங்கப்பூர் அரசு செய்து கொடுத்தது. 

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்- கிம் ஜாங் சந்திப்பு சிறந்த முறையில் நடக்க தலையாய காரணமாக இருந்தவர்கள் இரண்டு தமிழர்கள். ஒருவர் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். சந்திக்கும் இடம், தேதி முடிவான பின்னரும்கூட  ட்ரம்ப் தன்னிச்சையாக சந்திப்பை ரத்து செய்வதாக அறிவித்தார். அப்போது, வாஷிங்டனுக்கும் பியாங்கியாங்குக்கும் பறந்து இரு தரப்பையும் சமாதானப்படுத்தி சந்திப்பு நிகழ வைத்தவர் விவியன் பாலகிருஷ்ணன். மற்றொருவர்

 

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் அவர்கள். ட்ரம்ப்- கிம்ஜாங் சந்திப்பு நிகழ காரணமாக இருந்த இரண்டாவது தமிழர். இந்தச் சந்திப்பை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் பொறுப்பை  இவரிடம்தான் ஒப்படைத்திருந்தது சிங்கப்பூர் அரசு. தலைவர்களின் பாதுகாப்பு, தங்கும் இடங்கள், சந்திப்பு நிகழும் இடங்களை தீர்மானித்தது இவர்தான். சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கிய அமெரிக்க, வடகொரிய அதிபர்களை வரவேற்றதும் இவர்தான். சிங்கப்பூரின் வடகொரிய விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பும் இவரிடம்தான் உள்ளது. 

இந்த இரண்டு தமிழர்கள் குறித்து, நாமும் தமிழர் என்ற முறையில், நாம் வெற்றி பெருமிதம் கொள்ளலாம்.

அடுத்த இரண்டு தமிழர் கதைக்கு வருவோம். ஒருவர் சல்லிக்கட்டு  போராட்டம் வெற்றியாக முடிந்தும், போராட்டத்தை அசிங்கப் படுத்தி வெற்றியை வாங்கிக் கொடுத்தவர். முன்னால் முதல்வர் பன்னீர்.

மற்றொருவர் தொன்னூற்றொன்பது நாள் தமிழ்மக்கள் அறவழிப் போராட்டத்தை கவனிக்காமல் விட்டு விட்டு நூறாவதுநாள்  பதின்மூன்று தமிழர்களை பச்சை படுகொலை செய்தும், நூற்றுக்கும் மேலானவர்களை மருத்துவ மனையில் கிடத்தவும் செய்தவர் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். 

இருவருமாக சேர்ந்து மற்றொரு நாணித் தலைகவிழும் வகையான அடுத்த செயலுக்குத் தயாராகி விட்டார்கள். பசுமையை அழித்து பசுமைவழிச் சாலையாம். காற்று வாங்கிய படி இருக்கும் இரண்டு சாலைகள் இருக்கும் போது அடுத்து ஒரு சாலையாம். 

வனமாக இருக்கும் வரைதான் அவை மழைக்கான மரங்கள். தனித்தனி மரமாக நாம் நட்டு வளர்க்கும் மரங்கள் வர்தா புயலின் போது செங்கல்பட்டிலிருந்து சென்னை வரை விழுந்து, மின்கம்பங்களையெல்லாம் உடைத்து, வாகனங்களை நொருக்கி, ஏன் நட்டோம் மரங்கள் என்று நம்மை கேள்வி கேட்க வைக்கவில்லையா? அப்படித்தான் பயனற்றுப் போகும்.

நாம் வாக்களித்து வெற்றி பெறச் செய்தவர்கள் நமது நலனுக்கில்லாமல், நடுவண் அரசை ஆளும் பாஜகவின் ஹிந்தி, ஹிந்துத்துவா, ஹிந்துராஷ்டிரம் கோட்பாடுகளுக்கு சோரம் போகக் கூடாது; துணிச்சலாக ஆட்சி இழந்தால் மீண்டும் தமிழர்கள் உங்களை அரியணை ஏற்றுவார்கள்; நாணித் தலைகவிழ வைக்காதீர்கள் எடப்பாடி-பன்னீர் அவர்களே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,817.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.