Show all

உலகின் முதல் கடலோடி தமிழன்!

ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கு சொகுசு கப்பலில் பயணிக்கும் வகையிலான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

22,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் நிறுவனத்தின் சொகுசு பயணிகள் கப்பல் சேவை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

கோர்டிலியா குரூஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கு சொகுசு கப்பலில் பயணிக்கும் வகையிலான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சொகுசு கப்பல் சுற்றுலா சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, சென்னை துறைமுக கழகத் தலைவர் சுனில் பாலிவால், கோர்டிலியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் வர்மா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை வரும் 2 நாள் சுற்றுலா திட்டமும், சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி வழியாக மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் திட்டமும் இந்த சொகுசு கப்பலில் இயக்கப்படவுள்ளன. 2 நாள் சுற்றுலா திட்டத்துக்கு குறைந்தபட்சம் 2 நபருக்கு ரூ.40 ஆயிரம், அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்துக்குள் உணவும், தங்கும் செலவும் அடங்கும்.

சுமார் 700 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் 11 தளங்கள் கொண்டது. ஒரே நேரத்தில் 1,950 பயணிகள் உட்பட 2,500 பேர் வரை பயணிக்க முடியும். இதில் மொத்தம் 796 அறைகள் உள்ளன. இதுதவிர கலையரங்கம், 4 பெரிய உணவகங்கள், உடற்பயிற்சி மையம், அழகுநிலையம், நீச்சல் குளம், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. மேலும், கப்பலில் விருந்து கொண்டாட்டங்கள், திருமணங்கள், அலுவல் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது என கப்பல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இது பணக்காரர்களுக்கான நடப்பு பொழுதுபோக்கு கப்பல் கேளிக்கைதான். 

ஆனால் உலகின் முதல் கடலோடியான பழந்தமிழர் கடல்வரலாறு: வினையே ஆடவர்க்கு உயிரே என்ற பொருள் பொதிந்த நெடும்பயணம் ஆகும். 

முப்புறம் கடல்களால் சூழப்பட்ட பண்டைத் தமிழ்நாட்டின் நிலப்பகுதிகள் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் ஆட்சியின் கீழ் இருந்தன. அவர்கள் கடல்வழிப் பயணத்தையும் கடல் வணிகத்தையும் ஊக்கப்படுத்தினர். முசிறி, காவிரிப்பூம்பட்டினம், கொற்கை போன்ற பெரிய துறைமுகங்களும் பல சிறிய துறைமுகங்களும் சங்க காலத்தில் இருந்தன. தமிழ் வணிகர்கள் மேலை நடுத் தரைக்கடல் நாடுகளுக்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் குழுக்களாகச் சென்றுள்ளனர்.

திசையாயிரத்து ஐந்நூற்றுவர், மணிக்கிராமத்தார், நாணதேசிகள், அய்யப்பொழில், அஞ்சுவண்ணம் என இவர்கள் வழங்கப்பட்டனர். மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் என்ற இடத்தில் கிடைத்துள்ள தமிழிக் கல்வெட்டில் 'கடலன் வழுதி நெடுஞ்செழியன்' என்ற பெயர் காணப்படுகிறது. 

சிவகங்கை மாவட்டத்தில் பூலாங்குறிச்சி என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் 'கடலகப் பெரும்படைத் தலைவன்' என்ற பெயர் காணப்படுகிறது. கடலில் தனது ஆதிக்கத்தைச் செலுத்திய பெரும் படைத் தலைவரை இது குறிக்கிறது.

சேரர்களின் முசிறித் துறைமுகத்திலிருந்து பெரும் கப்பல்களில் பல பொருட்களைத் தமிழர்கள் ஏற்றுமதிசெய்து ஆப்பிரிக்க நாடுகளின் கிழக்குப் பகுதியில் செங்கடலை ஒட்டி இருந்த துறைமுகங்களான பெரினிகே, குசிர்-அல்-குதாம் ஆகிய துறைமுகங்களுக்கு ஏற்றிச் சென்றனர். 

செங்கடலை ஒட்டி இருந்த குசிர்-அல்-குதாம், பெரினிகே துறைமுகங்களில் தமிழ்நாட்டுக் கப்பல்கள் நங்கூரமிட்டு, அத்துறைமுகங்களிலிருந்து நில வழியாக ஆப்பிரிக்காவின் உள்பகுதிக்கு ஒட்டகங்கள் மூலமாகப் பயணப்பட்டு, நைல் நதியில் இருந்த துறைமுகத்தை அடைந்தன. சூயஸ் கால்வாய் வெட்டப்படாத அக்காலத்தில், நைல் நதி வழியாகப் பெருங்கப்பல்கள் தமிழ்நாட்டின் சரக்குகளை ஏற்றிக்கொண்டு, நடுத் தரைக்கடல் பகுதியில் இருந்த அலெக்சாண்டிரியாவைச் சென்றடையும். இச்சரக்குகள் அலெக்சாண்டிரியாவிலிருந்து நடுத் தரைக்கடல் வழியாகப் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு, குறிப்பாக ரோமாபுரிக்குக் கொண்டுசெல்லப்படும். மேற்குறித்த முசிறி வணிகரைக் குறிக்கும் கிரேக்க ஆவணம் இரண்டாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முந்தையது.

யவனர் எனக் குறிக்கப்படும் கிரேக்கர், தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களில் பணியாற்றியுள்ளனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள வசவசமுத்திரம், அரிக்கமேடு, அழகன் குளம் ஆகிய துறைமுகங்களில் கிடைத்த தொல்பொருட்கள் பலவும் யவன நாட்டிலிருந்து வந்தவை. 

இதே போன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன்குளம் என்ற இடத்தில் செய்யப்பட்ட அகழாய்வில் கப்பல் உருவம் பொறித்த இரண்டு மட்கலன்கள் கிடைத்துள்ளன. அழகன்குளம் சங்க காலத்தில் கடல் வணிகம் மேற்கொண்ட நகரமாக விளங்கியிருந்தது. மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில் உற்பத்தி செய்யப்பட்ட மணி வகைகள் மற்றும் ஆடைகள் அழகன்குளம் வழியாக ஏற்றுமதிசெய்யப்பட்டன. யவன வணிகர்களிடமிருந்து  பொன் நாணயங்களைப் பெற்றுக்கொண்டு நறுமணப் பொருட்களை கொடுத்திருந்தனர் தமிழ்வணிகர்கள். 

செங்கடல் பகுதியில் குசிர்-அல்-குதாம், பெரினிகே மற்றும் ஏமன் பகுதியின் கோரொரி ஆகிய துறைமுகப்பட்டினங்களில் அண்மையில் அகழாய்வுகளில் தமிழி எழுத்து பொறித்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவ்வோடுகளில் கணன், சாதன், கொற்றபூமான், ..ந்தை கீறன் போன்ற தமிழ் வணிகர்களின் பெயர்கள் காணப்படுகின்றன.

தமிழர்கள் கீழை நாடுகளான சுமத்ரா, ஜாவா, சீனம் ஆகிய நாடுகளிலும் 2,500 ஆண்டுகளுக்கும் முன்பாகவே கடல்வழிப் பயணம் மேற்கொண்டிருந்தனர். தாய்லாந்து நாட்டிலுள்ள கோலங் தோம் அருங்காட்சியகத்தில் பொன் உரசும் கல் ஒன்றில் 'பெரும்பதன் கல்' என்ற தமிழி எழுத்துப் பொறிப்பு இதனை உறுதிசெய்கிறது.

தக்கோபா என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டில், தமிழர்கள் குடியிருப்புகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. காவிரிப்பூம்பட்டினம் அருகிலுள்ள மணிக்கிராமத்தைச் சார்ந்த வணிகர்கள் தென்கிழக்காசியப் பகுதிகளில் கடல் வணிகத்தில் ஈடுபட்டனர். 

சீனர்கள் தங்கள் தூதுவர்களைத் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தனர் என்பதை சீன ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. 

சோழ மன்னர்களான ராஜராஜனும் ராஜேந்திர சோழனும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். ஸ்ரீவிஜய மன்னன் விஜயதுங்கன் தனது தந்தையின் பெயரில் சூடாமணிபன்ம பௌத்த விகாரை ஒன்றை நாகப்பட்டினத்தில் கட்டுவதற்கு ராஜராஜ சோழனின் அனுமதியைப் பெற்றார். சீனாவில் செங்கிஸ் கான் காலத்தில் அவரது பெயரால் சிவன் கோயில் ஒன்றைத் தமிழர்கள் கட்டியுள்ளனர். 

இத்தகைய தொன்மை வரலாற்றைக் கொண்ட கடல்வழிப் பயணம் குறித்தும், தமிழகத் தொன்மைக் கடற்கரைத் துறைமுகங்கள் குறித்து அறிவதற்கும் ஆழ்கடல் அகழாய்வு செய்வதற்குத் தமிழக அரசு இவ்வாண்டு பெரும் நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,270.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.