Show all

தமிழர் தொன்மை நிறுவிடச் சான்றுகள்! தோண்ட தோண்ட கிடைத்த வண்ணமாய் உள்ளன

தமிழ்நாட்டில் தோண்ட தோண்ட தமிழர் தொன்மை நிறுவிடச் சான்றுகள் கிடைத்த வண்ணமாயுள்ளன. கொற்கை அகழாய்வில் ஒன்பது அடுக்கு செங்கல் கட்டுமானத்திற்குள் இரண்டு அடுக்கு கொள்கலன் கிடைத்துள்ளது.

04,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கொற்கையில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுப் பணியில் நான்கு அடுக்கு கொண்ட திரவப் பொருள்கள் வடிகட்டும் சுடுமண் குழாய், ஒன்பது அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 அடி உயரமுள்ள இரண்டடுக்கு கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் தொல்லியல் அகழாய்வு பணிகள், கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வருகின்றன. 

கொற்கையில், பேரறிஞர் அண்ணா ஆட்சி காலத்தில் தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் ஏற்கெனவே அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன. அந்த அகழாய்வுப் பணிதான், தமிழ்நாடு தொல்லியல்துறை உருவான பின்னர், செய்யப்பட்ட முதல் அகழாய்வுப் பணியாகும்.

அந்த அகழாய்வில், கொற்கை நகரம் சுமார் 2,800 ஆண்டுகள் பழைமையானது என்பது உறுதியானது. இங்கு துறைமுகம் இருந்ததாகவும், இங்கிருந்து கடல்வழி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடந்ததாகவும், ‘கொற்கை’ பாண்டிய மன்னர்களின் தலைநகராகவும் விளங்கியது எனவும் அறிவிக்கப்பட்டது. 52 ஆண்டுகள் கழித்து, தற்போது இங்கு மீண்டும் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.

அகழாய்வு இயக்குநர் முனைவர் தங்கத்துரை தலைமையில், அகழாய்வாளர்கள் ஆசைத்தம்பி, காளீஸ்வரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அகழாய்வுப் பணிக்காக, கொற்கைப் பகுதியில் 17 ஆய்வுக்குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த அகழாய்வில் ஏற்கெனவே சுமார் 2,800 ஆண்டுகள் பழைமையான கட்டிடம், அறுக்கப்பட்ட நிலையில் சங்குகள், அறுக்கப்பட்ட சங்குகளை பட்டை தீட்டப் பயனபடுத்தப்பட்ட பல வடிகங்கள், சங்குகள், சங்கினால் செய்யப்பட்ட வளையல் துண்டுகள், இரும்பு உருக்குத் துண்டுகள், கறுப்பு சிவப்பு பானை ஓடுகள், கீறல்கள் மற்றும் பல்வேறு குறியீடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் நான்கு அடுக்குகள் கொண்ட திரவப் பொருள்களை வடிகட்டும் சுடுமண் குழாய்கள், உருகிய கண்ணாடி மணிகள், கடல் சிப்பிகள், சில கடல் வாழ் உயிரினங்களின் எலும்புகள், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் பயன்படுத்திய 9 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதே குழியில், இரும்பு உருக்கு, கண்ணாடி மணிகள் என வாழ்விட பகுதிகளை உறுதிப்படுத்தும் தொழிற்சாலைகள் இருந்ததற்கான அமைப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு 9 அடுக்கு செங்கல் கட்டுமானத்தின் அடியில் 4 அடி உயரம் கொண்ட கொள்கலன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கொள்கலனைத் தொல்லியல் ஆய்வாளர்கள் வெளியில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, அதன் அடியில் மற்றொரு கொள்கலன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரண்டடுக்கு கொண்ட கொள்கலன், பழங்காலத்தில் தானியப் பொருள்களைச் சேமித்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என, ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை அகழாய்வைப் போலவே கொற்கை அகழாய்வும் மிகவும் முதன்மைத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த மாத இறுதியில் ஆய்வுப் பணிகள் நிறைவுபெறவுள்ள நிலையில், அகழாய்வில் தொடர்ந்து பழங்காலப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது தொல்லியல் ஆர்வலர்கள் நடுவே பேரளவான மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,012.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.