Show all

புரவியாக, புழுதிக் கிளப்பி தாவிக்குதித்தோடத் தொடங்கி விட்டது குறளிச்செலாவணி!

இன்று ஒரேநாளில் ஐம்பது விழுக்காடு வரை உச்சம் தொட்டு வணிகமாகிக் கொண்டிருக்கின்றன குறளிச்செலாவணிகள். முதன்மைக் குறளிச்செலாவணியான பிட்காசு 25 விழுக்காட்டு உயர்வைத் தாண்டி விற்பனையாகிறது.

09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தடையோ, கட்டுப்பாட்டு விதிமுறைகளோ, அலைகழிப்பு வேண்டாமே என்று இந்தியாவில் குறளிச்செலாவணியில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் புலம்புகிற வகைக்கு ஒன்றிய பாஜக அரசு குறளிச்செலாவணி மீதான அச்சமூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த கிழமை இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி குறளிச்செலாவணி முதலீடு குறித்து முதல் முறையாக பேசியபோது, இளைஞர்களை சீரழிக்கும் முதலீடாக குறளிச்செலாவணி முதலீடு மாறிவிடக்கூடாது. இளைஞர்களைத் தவறான பாதைக்கு கொண்டு செல்லும் தீயவர்களின் கையில் குறளிச்செலாவணி போய்விடக்கூடாது. இந்த விடையத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றெல்லாம் தங்கள் தரப்பு நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார். 

இந்திய அரசு, தனியார் குறளிச்செலாவணி முதலீட்டைத் தடை செய்யப்போவதாகவும், இதற்கான கட்டுப்பாட்டு விதிமுறைகளை வருகிற குளிர்காலக் கூட்டத்தொடரில் பதிகை செய்யப் போவதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், இந்தியாவில் குறளிச்செலாவணி முதலீடுகளுக்குத் தடையா அல்லது அனுமதியா அல்லது இந்தியக்கட்டுப்பாட்டு வங்கியின் புதிய குறளிச்செலாவணி அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்த தகவல்கள் மாறி மாறி வந்துகொண்டே இருப்பது, குறளிச்செலாவணியில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் நடுவே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக பல குறளிச்செலாவணியின் விலை நேற்று பெருமளவு சரிந்துள்ளது. குறிப்பாக, முதன்மைக் குறளிச்செலாவணியாகக் கருதப்படும் பிட்காசுவின் விலை இம்மாத தொடக்கத்தில் 69,000 டாலராக இருந்தது. அது தற்போது 56,920 டாலராக சரிந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1,000 டாலருக்கு மேல் சரிந்துள்ளது.

இந்திய அரசு கொரோனா நிதிக்கு நன்கொடையாக வந்திருந்ததான- செய்திக்குச் சொந்தமான, கடந்த சில மாதங்களாக- அதிக விலை ஏற்றத்தை சந்தித்து வந்த சிபா இனு என்கிற குறளிச்செலாவணி நேற்று ஒரே நாளில் மட்டும் 8விழுக்காடு வரை விலை குறைந்து 0.000039 டாலருக்கு வர்த்தகமாகிறது. 

அதே போல பெரும்பாலான குறளிச்செலாவணி முறிகளும் 25 விழுக்காடு வரையிலான விலை வீழ்ச்சியைச் சந்தித்தன.

குறளிச்செலாவணி- இந்தியாவின் நேற்றைய குறளிச்செலாவணி குறித்த தகவலால் சற்றே அதிர்ந்தாலும், நடுத்தட்டு நாடுகள் விரும்பி அங்கீகரிக்கிற உலகளாவிய பொருளாதார முன்னெடுப்பு என்கிற காரணம் பற்றி, புரவியாக, புழுதிக் கிளப்பி தாவிக்குதித்தோடத் தொடங்கி விட்டது குறளிச்செலாவணி இன்று. 

நேற்று ஒன்றிய பாஜக அரசு தந்த அதிர்ச்சியில் அதிரடியாக குறளிச்செலாவணிகளை விற்காமல் காத்திருப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இன்று வணிகமாற்றும் பலருக்கு இன்று நல்ல ஆதாய நாளாகும்.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,078.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.