Show all

ஆய்வில் தகவல்! கோவிசீல்டு கொரோனா தடுப்பூசி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும்

சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிசீல்டு கொரோனா தடுப்பு மருந்து ஒருவரின் வாழ்நாள் முழுவதும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்துகளைத் தயாரித்து வருகிறது. இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிசீல்டு என்ற பெயரில் இந்த மருந்தை தயாரித்து, மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவிஷீல்டு மருந்தின் செயல்பாடுகள் குறித்து இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஆக்ஸ்போர்டு இயல்அறிவர்கள் ஆய்வு நடத்தினர். இதில், கோவிசீல்டு தடுப்பு மருந்து, கொரோனா குறுவிக்கு (வைரஸ்) எதிராக எதிர்ப்பு அணுக்களை உருவாக்குவதோடு, ஒருவரின் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவிசீல்டு தடுப்பூசிக்கு ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது 16 ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்துள்ளன. எனவே இரண்டு, தடவை கோவிசீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அந்த நாடுகளுக்குள் நுழைய தடை ஏதும் இல்லை என சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா கூறுகையில், ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, பின்லாந்து, ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் கோவிசீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அயர்லாந்து, லாட்வியா, நெதர்லாந்து, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இரண்டு தடவை கோவிசீல்டு போட்டுக் கொண்டவர்கள் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்குள் நுழைய தடை ஏதும் இல்லை.

வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாடுகளுக்குள் நுழைய ஒவ்வொரு நாடும் வெவ்வேறு விதமான விதிமுறைகளை பின்பற்றுகின்றன. பயணியர் அதை கவனமுடன் அறிந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில், பைசர், மாடர்னா மற்றும் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகளின் இரண்டு தடவை போட்டு கொண்டவர்கள், பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைய பரிசோதனை தேவையில்லை என, அந்த நாடு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் கோவிசீல்டு தடுப்பூசிக்கும் அங்கீகாரம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.