Show all

பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே பிரமாண்ட அணை கட்டும் பணியை சீனா

இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே பிரமாண்ட அணை கட்டும் பணியை சீனா வேகப்படுத்தி வருகிறது. இந்தியாவிற்கு தற்போது அதிக முட்டுக்கட்டை சீனா வாயிலாக வந்து கொண்டு இருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சீனா இன்னொரு புறம் தனது பொருளாதாரச் சந்தையாக இந்தியாவை மாற்ற விரும்புகிறது. இதற்காக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தை இணைத்து இணைப்புச்சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்திய எல்லை வரை புல்லட் ரயில் சேவை பணியை நீட்டித்து உள்ளது. இதற்காக புதிதாக 2000 கிமீ தூரத்திற்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. தற்போது இந்தியாவின் வடமாநிலங்களுக்கு தண்ணீர் வழங்கும் பிரம்மபுத்திரா நதியை முற்றிலும் முடக்கும் நடவடிக்கையை சீனா மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு திபெத்தில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் பிரமாண்ட நீர்மின்சாரம் தயாரிக்கும் புதிய மின்நிலையம் அமைக்கப்பட்டது. அப்போது சீனாவிடம், இந்தியா தனது கவலையை தெரிவித்தது. வழக்கம் போல இது எதையும் சீனா கண்டு கொள்ளவில்லை. தற்போது 12வது ஐந்தாண்டுத்திட்டத்தின் படி கூடுதலாக 3 நீர்மின்சார நிலையங்களை அமைக்கும் பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இது இந்தியாவிற்கு தெரியவந்தது. மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் சன்வார்லால் ஜாட் இதுகுறித்து மீண்டும் சீனாவிற்கு இந்தியாவின் கவலையைத் தெரிவித்தார். போங்கடா நீங்களும் உங்கக் கவலையும் என்று இந்தியாவை மதிக்காமல் அடுத்ததாக ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் மிகப்பெரிய அணையை கட்டும்பணியை சீனா தொடங்கி உள்ளது. அதுவும் இந்திய எல்லை அருகே ஓடும் பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே இந்த அணையை கட்டி தண்ணீரை தேக்கி திபெத் பகுதியை வளமிக்கதாக மாற்றும் பணியை சீனா தொடங்கி உள்ளது. சீனாவிலே அதிக பொருட்செலவில் அமையும் அணை இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான தொடக்கக் கட்ட பணிகள் 2014 ஜூனில் தொடங்கப்பட்டாலும், தற்போது கட்டுமான வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 2019ல் திட்டமிட்ட காலத்திற்கு முன் அணையைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய அணை திபெத் பகுதியில் உள்ள ஜிக்கேசியில் அமைகிறது. இந்திய மாநிலங்களான சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப்பகுதியில் மிகச்சரியாக அமைகிறது. பிரம்மபுத்ராவின் மிகப்பெரிய கிளை பிரிந்து இந்தியாவிற்குள் நுழையும் இடத்தில் கட்டுமான வேலை தொடங்கப்பட்டுள்ளன. இதனால் சிக்கிம் மற்றும் அருணாச்சலபிரதேச மாநிலங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகும். அதோடு வங்கதேசமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அணை கட்டும்பணியை சீன அரசு சார்பில் இயங்கும் ஜின்குவா செய்தி நிறுவனமும் உறுதிப்படுத்தி உள்ளது. லால்கூ திட்டம் என்று இதற்கு சீனா பெயரிட்டுள்ளது. யார்லாங் சாங்பு (அதாங்க...நம்ம பிரம்மபுத்ரா நதியின் சீனப் பெயர்) ஆற்றின் ஜியாபுகு ஆற்றின் குறுக்கே இந்தத் திட்டம் அமைகிறது என்று குறிப்பிட்டுள்ளது. 2013ல் இருநாட்டு எல்லையில் ஓடும் நதிப்பிரச்னையில் வல்லுநர் குழு முடிவின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. அதை சீனா தற்போது பின்பற்றவில்லை. அதேசமயம் பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்தியா ஆலோசனை நடத்தியதால் ஆத்திரம் அடைந்து சீனா இந்த அணையை கட்டி நீர்மின்சாரம் தயாரிக்கும் பணியை வேகப்படுத்தி வருவதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் சீனாவின் அணை உருவானால் இந்தியாவிற்கு புதிய தலைவலி உருவாகும் என்பது நிச்சயம். உள்நாட்டு நதி பிரச்சனையில் உருப்படியாக காய் நகர்த்தாத இந்திய அரசு தம்மை என்ன செய்ய முடியும் என்கிற தெனாவெட்டு சீனாவிற்கு.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.