Show all

இயங்கலையில் 36 விழுக்காட்டு வட்டிக்கு சீனர் ஒருவரின் கடன் நிறுவனம்! பாதிக்கப்பட்டவர் தற்கொலை; பாதிப்பு ஏன்? ஒர் அலசல்

கடன் செயலி மூலம் ரூ.4 ஆயிரம் கடன் வாங்கியவர், குறிப்பிட்ட நாட்களுக்குள் கடனை செலுத்த முடியாததால், கடன் வழங்கிய நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஆபாசமாக திட்டி அவமானப்படுத்த, அவமானம் அடைந்த விவேக் தனது கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில், கொரோனா தொடக்கத்தில், கொரோனா ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. இதனால் சிறுத்தொழில் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பொருளாதார இழப்பை சந்தித்தன. தனியார் நிறுவனங்களில் வேலையிழப்புகள் அதிகரித்தன. வேலையிழந்தவர்கள் பணத்தேவைக்காகவும், குடும்பத்தை நடத்தவும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 

இந்த சூழ்நிலையில், இயங்கலையில் கடன் செயலியை பதிவேற்றம் செய்து உடனடியாக கடன் பெறலாம் என்று இணையதளங்களில் சிலர் விளம்பரம் செய்தனர். பணத்தேவையும்;, கடன்பெற தனியார் மற்றும் வங்கி ஆதரவற்ற, எளியோர் பலரும், இந்தச் செயலிகளைப் பதிவேற்றம் செய்து கடன் பெற்று வந்தனர். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பழையனூர் கிராமத்தை சேர்ந்த விவேக் (27) என்பவர் தனது தந்தையின் மருத்துவ செலவுக்காக இந்தக் கடன் செயலி மூலம் ரூ.4 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் அவரால் கடனை செலுத்த முடியாததால், கடன் வழங்கிய நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் விவேக்கை ஆபாசமாக திட்டி அவமானப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான உரையாடல் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால் அவமானம் அடைந்த விவேக் தனது கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இந்தநிலையில் சென்னை வேங்கைவாசலை சேர்ந்த கணேசன் என்பவர் காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலை அண்மையில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக வேலையில்லாமல் பணத் தேவைக்காக சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது சமூகவலைத்தளங்களில் ‘கடன் செயலி’ மூலம் உடனடி கடன் கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்து ‘எம் ரூபி’ என்ற செயலியை பதவிறக்கம் செய்தேன்.

அப்போது என்னுடைய வருமானவரித்துறை அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் போன்ற விவரங்கள் செயலியில் பதிவு செய்யப்பட்டது. நான் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கினேன். இதற்கு ஒரு கிழமைக்கு ரூ.1,500 வட்டியாகப் பிடித்துக்கொண்டு, ரூ.3 ஆயிரத்து 500 பணத்தை எனது வங்கி கணக்கில் போட்டார்கள். ஆனால் அவர்கள் போட்ட நிபந்தனையின்படி என்னால் வட்டி கட்ட முடியவில்லை. இதனால் 45 வெவ்வேறு செயலிகளில் கடன் பெற்று செலவுக்கும், வட்டி கட்டவும் பயன்படுத்தி வந்தேன். 

இந்த நிலையில் என்னால் ஒரு நிலையில் வட்டி கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஒருநாளைக்கு 2விழுக்காட்டு வட்டி கட்டவேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். பின்னர் அன்றாடம் வெவ்வேறு செல்பேசி எண்களில் இருந்து என்னை தொடர்பு கொண்டு ஆபாசமாகவும், அருவெறுக்கத்தக்க வகையிலும் பேசி அவமானப்படுத்துகிறார்கள். அதுமட்டுமின்றி எனது நண்பர்கள், குடும்பத்தினர் எண்களையும் தொடர்புக்கொண்டு அவமானப்படுத்தி மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே அதிக வட்டி வசூலிக்கும் ‘கடன் செயலி’யை சேர்ந்தவர்கள் மீது சட்டப்பாட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். மிரட்டல் அழைப்பின் உரையாடல் பதிவுகளையும் புகார் மனுவோடு அவர் கொடுத்திருந்தார். 

இந்த புகார் மனு மீது உடனடியாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய சென்னைக் கிளை குற்றப்பிரிவு காவலர்களுக்கு, ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்பேரில் ஒன்றிய சென்னைக் கிளை குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி நேரடி மேற்பார்வையில், சீட்டு மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவு காவலர்களும், ‘சுழியம் குற்;றவியல்’ காவல்துறையினரும் இணைந்து புலன் விசாரணையில் களம் இறங்கினார்கள். தீவிர விசாரணையில் 50-க்கும் மேற்பட்ட கடன் செயலிகள் ‘கூகுள் விளையாட்டுக் கடையில் இருப்பதும், அவற்றில் பெரும்பாலான செயலிகள் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படுவதும் தெரிய வந்தது.

புகார்தாரர் கணேசனுக்கு வந்த மிரட்டல் அழைப்புகள் பெங்களூருவில் ‘ட்ரூ கிண்டில் டெக்னாலஜி பிரைவேட் நிறுவனம்’ என்ற பெயரில் இயங்கி வரும் அழைப்பு மையத்தில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஒன்றிய சென்னைக் கிளை குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் பெங்களூரு விரைந்தனர். அந்த அழைப்பு மையத்தில் அதிரடியாக சோதனை நடத்தினார்.

அப்போது அங்கு 110 பேர் பணி புரிவதும், பெங்களூரு தெற்கு இந்திரா நகர் துப்பனஹல்லி பகுதியை சேர்ந்த பிரமோதா (28)  தும்கூர் மாவட்டம் சிரா தாலுக்கா, சிக்கனஹல்லி பகுதியை சேர்ந்த சி.ஆர்.பவான்(27) ஆகிய 2 பேர் இந்த அழைப்பு மையத்தை நிர்வகித்து வருவதும் தெரிய வந்தது. கடன் செயலிகள் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குறுகிய காலத்தில் உடனடி கடன் என்று கூறி, கடன் அளித்திருப்பதும், கடனை ஒரு கிழமைக்குள் திரும்ப செலுத்தாதவர்களை இந்த அழைப்பு மையத்தில் இருந்து தொடர்புக்கொண்டு மிரட்டி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பிரமோதா, சி.ஆர்.பவான் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 மடிக்கணனி, 20 செல்பேசிகள், நிறுவனம் தொடர்பான ஆவணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இவர்களோடு சீனாவை சேர்ந்த சியாவ் யங்மாவ், ஊ யுமேன் ஒன் ஆகிய 2 பேர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 மடிக்கணினி, 6 செல்பேசிகள், எல்லைகடவு, ஆதாயஅட்டை ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

இதற்கிடையே கைது செய்யப்பட்ட பிரமோதா, சி.ஆர்.பவான் ஆகிய 2 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டனர். தாம்பரம் அறங்கூற்றுமன்றத்தில் அணியப்படுத்தப்பட்டு 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதே போல் சீனர்கள் 2 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டு, அறங்கூற்றுமன்றத்தில் அணியப்படுத்தப்பட்டு தனியாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் 2 வங்கி கணக்குகளை பயன்படுத்தி வந்தனர். இதில் ஒரு வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 98 லட்சமும், மற்றொரு வங்கி கணக்கில் ரூ.48 லட்சமும் இருந்தது. அந்த 2 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சீனர்கள் 2 பேரும் ஓராண்டாக பெங்களூருவில் தங்கி இருந்து, இந்த கடன் செயலியை வழிநடத்தி வந்துள்ளனர். இவர்கள் கடனுக்கு 36 விழுக்காடு வட்டியாக தண்டி வந்துள்ளனர். இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியான சீனாவை சேர்ந்த ஹாங்க், இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளார். அவரது பயணம் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 

சீன எதிர்ப்பை- வெற்று முழக்கங்களில் காட்டுவதும், அவர்களது பொழுதுபோக்கு செயலிகளைத் தடை செய்வதும், போதுமானவைகள் அல்ல. நமது மக்களை தொடர்ந்து ஏதாவதொரு வகையில். சீனம் உள்ளிட்ட அன்னியத்தை சார்ந்து இயங்கும் வகைக்கு வறுமையிலேயே வைத்திருக்கிற நிலையை களைவது மட்டுமே தீர்வு என்பதை இந்த குற்ற நிகழ்வு நமக்கு உணர்த்துவதாகிறது.

கடன் வாங்கிவிட்டு அன்னிய நாட்டுக்கு தப்பியோடும் நிரவ்மோடி போன்ற பணமுதலைகளுக்கு மட்டுமே இந்திய வங்கிகள் என்றான நிலையில், ஆதரவற்ற பாமரமக்களுக்கு ஆதரவு அளிப்பது போன்று அன்னியர்கள் இங்கே களமிறங்கி குற்றமாடுவதற்கு- காரணம் ஆளும் ஒன்றிய பாஜக ஆட்சியின் பேரவலமேயாகும்.  

ஆம். பணம் படைத்த ஒற்றைச் சீனர் நாடு கடந்து, தன் பணத்தை 36விழுக்காடு வட்டிக்கு பன்மடங்கு பெருக்கிக் கொள்ள, இந்தியா தளமாக்கப்பட்டிருக்கிறது என்பது பேரவலமே.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.