Show all

குவியம் கூட்டத்தின் மூலமாக 900 பேர்கள் பணிநீக்கம்! திறனாய்வுக்குள்ளாகியிருக்கும் பெட்டர்.காம் தலைமை செயல் அதிகாரி

அமெரிக்காவைச் சேர்ந்த வீட்டு வசதி கடன் நிறுவனம் ஒன்றில், குவியம் கூட்டம் வாயிலாக 900 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கடும் திறனாய்வுக்கு உள்ளாகியுள்ளார்.

21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்திய மரபுரிமையரான விசால் கார்க் என்பவர், பெட்டர்.காம் என்ற வீட்டு வசதி கடன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த வலைதளத்தில் தரகு கட்டணமின்றி நிலம், வீடு வாங்க கடன் வசதி பெறலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

குவியம் கூட்டம் வாயிலாக இந்த நிறுவனத்திலிருந்து 900 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளார் விசால் கார்க்.

விசால் கார்க், அந்தக் குவியம் கூட்டத்தில், 'நீங்கள் இந்த அழைப்பில் இடம்பெற்றிருந்தீர்கள் என்றால் இன்று நமது நிறுவனத்தில் நடைபெறும் ஆட்குறைப்பில் நீங்களும் ஒருவர். நீங்கள் போகூழ் வாய்ப்புக் குழுவைச் சேர்ந்தவர். கடந்த முறை இதே முடிவை எடுத்தபோது நான் அழுதேன்' என தெரிவித்துள்ளார். இச்செய்தி சமூக ஊடகங்கள் வழியாக தெரியவந்துள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நெருங்கி வரும் நிலையில், இந்த நடவடிக்கை மிகவும் கடுமையானது என பலரும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நடவடிக்கை தொடர்பாக விசால் கார்க் கூறுகையில், பணியாளர்களின் செயல்திறன், சந்தை மாற்றங்களால் 15 விழுக்காடு பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட தனது நிறுவனத்தின் ஊழியர்கள் உடன் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்தும் பணத்தைத் திருடுகிறார்கள் என, முன்னதாக தான் எழுதிய வலைப்பதிவில் விசால் கார்க் குற்றம்சாட்டியுள்ளதாக ஒரு பேரறிமுக இதழ் தெரிவித்துள்ளது. 

மேலும், அப்பதிவில், எட்டு மணிநேரத்திற்கான ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு ஒருநாளில் இரண்டு மணிநேரம் மட்டுமே அவர்கள் பணி செய்வதாகவும் விசால் கார்க் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாகவும் இவ்வாறான பணிநீக்கத்துக்காக பெயர் பெற்றவர் விசால் கார்க், ஒரு முறை ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒரு பேரறிமுக இதழுக்குக் கிடைத்தது.

அந்த மின்அஞ்சலில் அவர், 'நீங்கள் படு மந்தமாக இருக்கிறீர்கள். மந்தமான டால்பின்கள் எனக்கு வேண்டாம். நீங்கள் என்னை அறநெருக்கடிக்கு ஆளாக்குறீர்கள். உங்கள் பணியை இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,090.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.