Show all

பிரிட்டானிகா நிறுவன அதிகாரி 19-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

ஹரியாணா மாநிலம், குர்கானில் பிரிட்டானிகா தகவல் களஞ்சிய புத்தக நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர், 19-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து குர்கான் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹவா சிங் கூறியதாவது:

குர்கானில் டிஎல்எஃப் அடுக்குமாடி குடியிருப்பில் பிளாக்-டி பிரிவில் வினீத் விக் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவர், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா நிறுவனத்தின் தெற்காசியக் கிளையில் தலைமைச் செயலதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை 19ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலம் பிளாக்-சி கட்டடத்தின் புகை போக்கிக்குள் கிடந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், காவல்துறையினர் விரைந்து வந்து வினீத்தின் சடலத்தைக் கைப்பற்றினர். இதுதொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்வதற்கு முன்பு வினீத் எழுதியதாக கூறப்படும் கடிதமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் அவர், வாழ்க்கையின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வினீத் தற்கொலை செய்து கொண்டது பற்றிய தகவல் தெரியவந்ததும், அவரது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார் ஹவா சிங்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.