Show all

ஆட்சியாளர்களுக்கு மாற்று நீதிமன்றங்கள் கிடையாது: நடுவண் நிதியமைச்சர் அருண் ஜெட்லி

இந்தியா பின்பற்றி வரும் நீதி நிருவாகம்-

ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி நிருவாகத்தை கட்டுப்படுத்துவதற்காக அவர்களுக்குத் தோதாக அவர்களால் (ஆங்கிலேயர்களால்) வடிவமைக்கப் பட்டவை.

விடுதலை பெற்று மக்களாட்சி முறையை ஏற்றுக் கொண்ட இந்தியாவிற்கு-

ஆட்சியைக் கட்டுப்படுத்துவதான ஆட்சி அதிகாரத்தில் நீதித்துறை குறுக்கிடுவதான நீதி நிருவாகத்தில் மாற்றத்தை எதிர் நோக்கி சமீபகாலமாக கருத்தைப் பதிவு செய்து வரும் நடுவண் நிதியமைச்சர் அருண் ஜெட்லி,

நீதித்துறை தானே தனது லட்சுமண ரேகையை வரையறுத்து கொள்ள வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

டெல்லியில் இந்திய பெண் பத்திரிகையாளர்கள் அமைப்பு சார்பில் நேற்று நடந்த விழாவில் நடுவண் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பங்கேற்றார். அப்போது,

நீதித்துறையின் பரிசீலனைகள் அதன் நியாயமான அதிகார வரம்புக்கு உட்பட்டவைதான். ஆனாலும் அவர்கள் எந்தளவுக்கு செல்லலாம் என்பதை தாங்களாகவே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அனைத்து அமைப்புகளும் தாங்களே தங்களது லட்சுமணன் ரேகையை வரைந்து கொள்ள வேண்டும். இது மிகவும் அவசியமானது.

 

ஆட்சியாளர்களுக்கு மாற்று, நீதிமன்றங்கள் கிடையாது. எனவே, ஆட்சி அதிகாரத்தின் எல்லைகளுக்கு உட்பட்ட விவகாரங்களை நீதித்துறை கையில் எடுத்துக் கொள்ள கூடாது. ஆட்சி அதிகாரத்தினால் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை ஆட்சியில் உள்ளவர்கள்தான் எடுக்க வேண்டும். நீதித்துறை எடுக்கக் கூடாது.

அதை மாற்ற வேண்டுமென மக்கள் கூறலாம் அல்லது தேர்தலில் தங்கள் வாக்குரிமை மூலம் அரசை மாற்றலாம். எனவே, நீதித்துறை தங்கள் எல்லையை சரிவர நிர்ணயித்துக் கொள்வது அவசியம்.

மருத்துவ பொது நுழைவுத்தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பல மாநிலங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த விஷயத்தில், பல மாநில கல்வி வாரியங்கள் சமமாக இல்லை.

மொழியும் வேறு வேறாக உள்ளன.

அவர்களை எப்படி ஒரே நுழைவுத் தேர்வு எழுதச் சொல்ல முடியும்?

 

இதனை தான் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட விஷயமாக நான் கருதுகிறேன். இதில் தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இப்போது இதனை கையாளும் முறையை நாம் பார்க்க வேண்டும். 

நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும், நீதித்துறையின் சுதந்திரம் என்பது நமது அடிப்படை கட்டமைப்பில் ஒரு பகுதியாக எப்படி இருக்கிறதோ அதே போலதான் ஆட்சி அதிகார எல்லைக்குட்பட்ட விஷயத்தில் ஆட்சியாளர்கள் முடிவெடுப்பதும் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியே.

இதில், ஒரு கட்டமைப்பை காப்பாற்ற மற்றொன்றில் சமரசம் செய்து கொள்ள முடியாது. ஒரு கட்டமைப்பை மட்டும் காப்பாற்றினாலும் பயன்இல்லை.

இவை இரண்டும் சமமாக செல்ல வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, சரக்கு மற்றும் சேவை வரி விவகாரத்தில் மாநிலங்களுக்கும் நடுவண் அரசுக்கும் பிரச்சனை எழுந்தால் நீதிபதி ஒருவர் மூலம் தீர்வு காண வேண்டும் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் கோரிக்கை வைத்தபோது, அருண் ஜெட்லி,

பட்ஜெட் மற்றும் வரி விதிப்பு அதிகாரங்களை நீதித்துறையின் வசம் விடக்கூடாது என்றார்.

பின்னர் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் பேசிய அவர்,

உச்ச நீதிமன்றத்தை மதிக்கிறோம். ஆனால் ஒருவர் மற்றவர் விஷயத்தில் தலையிடக் கூடாது என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.