Show all

ஓடும் காரில் மகப்பேற்றுச் சாதனை! சிறப்பாக ஒத்துழைத்த தானியங்கி பயன்முறையில் இயங்கிய டெஸ்லாகார்

தானியங்கி பயன்முறையை காரில் வடிவமைத்த டெஸ்லா பொறியாளர்களுக்கு கேட்டிங் தன்னுடைய நன்றியைத் தெரிவித்திருக்கும் வகைக்கு- ஒத்துழைத்தது ஓடும் காரில் மகப்பேற்றுச் சாதனைக்கு- டெஸ்லாகார்

07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு ஓடும் காரில் மகப்பேறு நடைபெற்றிருக்கிறது. 

பிலடெல்பியா நகரில் வசித்து வரும் இரன்செர்ரி என்னும் பெண்மணி கருவுற்று நிறைமாத நிலையில் இருந்திருக்கிறார். இவர் தன்னுடைய மூன்று அகவை மகனைப் பள்ளியில் விடுவதற்காக தன் கணவர் கேட்டிங் செர்ரியுடன் காரில் சென்ற போது திடீரென மகப்பேறு வலி ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவர்கள் வாகன நெரிசலில் வேறு மாட்டி இருந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்திருக்கின்றனர். நேரம் ஆக ஆக வலி அதிகரித்ததுடன் வண்டியும் மெதுவாகவே நகர்ந்தது. 

மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியுமா என்பது தெரியாத சூழலில், வேறு வழியின்றி அருகிலுள்ள மருத்துவமனைக்குக் காரை தானியங்கி பயன்முறையில் (ஆட்டோ பைலட் மோடு) அமைத்து விட்டு கேட்டிங் தன் மனைவியைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார். காரின் முன் இருக்கையில் அமர்ந்தபடியே இரன் குழந்தையைப் பெற்றெடுக்க அணியமாகியுள்ளார். தானியங்கி பயன்முறையில் ஓடிய அவர்களுடைய கார் தானாகவே மருத்துவமனையை அடைந்த போது இரன் தன்னுடைய மகளைப் பெற்றெடுத்திருக்கிறார்.

மருத்துவமனையை அடைந்ததும், செவிலியர்கள் காருக்கே வந்து முதலுதவி செய்து இரனையும், அவரது மகளையும் வரவேற்றிருக்கின்றனர். டெஸ்லா காரிலேயே இந்த குழந்தை பிறந்ததால் 'டெஸ்லா மகவு' என இந்தக் குழந்தையைச் செல்லமாக அழைக்கின்றனர். 

தானியங்கி பயன்முறையை காரில் வடிவமைத்த டெஸ்லா பொறியாளர்களுக்கு கேட்டிங் தன்னுடைய நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,105.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.