Show all

ஆஸ்திரேலியாவின் தேசிய கல்வித் திட்டத்தில் தமிழ்: ஹூ மெக்டெர்மாட் கோரிக்கை

ஆஸ்திரேலியாவின் தேசிய கல்வித் திட்டத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹூ மெக்டெர்மாட் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான தீர்மானத்தை நியூ சவுத் வெல்ஸ் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். தமிழ்க் கல்வியும், கலாசாரமும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமன்றி தெற்காசிய நாடுகளுக்கு மிகவும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகம் முழுவதும் 70 மில்லியன் மக்கள் தமிழ் மொழி பேசுகின்றனர். இதனை ஆஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மொழியைப் பாடப்புத்தகத்தில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆஸ்திரேலிய மாணவர்களும் பயன்பெற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். இவ்வாறான நடவடிக்கை சமகால மாணவர்களுக்கு மட்டுமன்றி எதிர்கால சந்ததிக்கும் பயனுள்ளதாக அமையும் என ஹூ மெக்டெர்மாட் குறிப்பிட்டார். தமிழ் மொழியைத் தேசிய பாடமாக அங்கீகரிக்குமாறு பாராளுமன்றத்தில் வைத்து கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மாணவர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கற்க முடியும். தமிழைக் கற்றுக்கொடுக்கும் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தமிழ் மொழியை பரப்பும் கலாசார நிறுவனங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஹூ மெக்டெர்மாட் குறிப்பிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.