Show all

அபுதாபியில் எதிரொலிக்கும் முகேஷ் அம்பானியின் வளர்ச்சி! 2பில்லியன் டாலரில் அபுதாபியில் அம்பானியின் புதிய தொழிற்சாலை

ஐக்கிய அரபு நாடுகளின் அரசு மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பேரளவான பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலையை அபுதாபியில் உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் தொழில்நிறுவனம் நீண்ட காலமாக அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஆர்எஸ்சி கூட்டணியில் மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை கட்ட திட்டமிட்டு வந்த நிலையில் தற்போது இந்த ஒப்பந்தம் முக்கிய இடத்திற்கு வந்துள்ளது. 

ஐக்கிய அரபு நாடுகளின் அரசு மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பேரளவான பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலையை உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முதல் மத்திய கிழக்கு முதலீடு இதுதான். உலகம் முழுவதும் தற்போது, நெகிழி மூலப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ள வேளையில் அபுதாபி அரசின் டாசிஸ்  மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து நீரகக்கரிமத்தை (ஹைட்ரோகார்பன்) பல்வேறு உற்பத்தி பொருட்களாக மாற்றும் தொழிற்சாலையை நிறுவ உள்ளது.   

உற்பத்தி பொருட்கள் ரிலையன்ஸ் முதலீட்டில் உருவாகும் இந்தத் தொழிற்சாலை டாசிஸ் ஈடிசி அன்ட் பிவிசி என்ற பெயரில் உருவாக உள்ளது. இப்புதிய கூட்டணி அமைக்கும் தொழிற்சாலையில் குளோர்-ஆல்கலி, எத்திலீன் டைகுளோரைடு மற்றும் பாலிவினைல் குளோரைடு ஆகியவற்றைத் தயாரிக்க உள்ளது. 

இந்தப் புதிய தொழிற்சாலையை அபுதாபியில் இருக்கும் அல் ருவைஸ் பகுதியில் இருக்கும் டாசிஸ் தொழிற்பேட்டையில் அமைக்க உள்ளதாக இக்கூட்டணி தெரிவித்துள்ளது. 

அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் டாசிஸ் தொழிற்பேட்டை என்பது பெட்ரோ கெமிக்கல் துறைக்காகவே உருவாக்கப்பட்ட தொழிற்பூங்கா. அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் டாசிஸ் திட்டத்தில் மட்டும் சுமார் 5 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைத் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. 

இந்த முதன்மையான திட்டத்திற்காக ஐக்கிய அரபு நாட்டின், அபுதாபி குளோபல் மார்கெட் சந்தையில், முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். 

இது முழுக்க முழுக்க வெளிநாட்டு நிறுவனம். ரிலையன்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தை 1 மில்லியன் டாலர் முதலீட்டில் 1 டாலர் வீதம் 10 லட்சம் பங்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளதாகப் பங்குச்சந்தைக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மேலும் ரிலையன்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் 100 விழுக்காடு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கிளை நிறுவனமாகும். தற்போது டாசிஸ் தொழிற்பேட்டையில் உருவாக்கப்படும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலை அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ரிலையன்ஸ் இண்டர்நேஷனல் கூட்டணி நிறுவனத்தில் தான் உருவாக்கப்படுகிறது. 

மேலும் இந்தத் தொழிற்சாலை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,092.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.