Show all

காரை வெடிவைத்து தகர்த்த முன்னெடுப்பு! பழுதுநீக்கத்திற்கு பதினேழு லட்சம் கேட்டதால் ஆத்திரமடைந்து

மின்கலவடுக்கு மாற்ற இவ்வளவு செலவா? என்று ஆத்திரமடைந்து டெஸ்லா காரை வெடிவைத்து தகர்த்தார் பழுதான காரின் உடைமையாளர்.

06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பின்லாந்தைச் சேர்ந்த ஒருவர், தனது டெஸ்லா காரின் பழுதுநீக்கத்திற்கு ரூ.17 லட்சம் கேட்டதால் ஆத்திரமடைந்து, காரை வெடிவைத்து தகர்த்த முன்னெடுப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, புதுமைகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மின்சாரத்தில் இயங்கும் வாகன துறையில் முன்னணியில் உள்ளது.  ஆனாலும் வாடிக்கையாளர் ஒருவர், காரை வெடிக்கச் செய்த வெறுப்பை ஈட்டியுள்ளது இந்த நிறுவனத்தயாரிப்பு. 

பின்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஜாலா என்ற கிராமத்தைச் சேர்ந்த தூமஸ் கடைனென் என்பவர், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளை நிற 'டெஸ்லா மாடல் எஸ்' வகை காரை வாங்கி உள்ளார். இவரது கார் பழுதானநிiயில் மின்கலவடுக்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 17 லட்சம் ஆகும் என தெரிவிக்கப்பட்டதால், இவ்வளவு செலவு செய்வதற்கு, காரை உடைத்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து, தேரை 30 கிலோ வெடிமருந்து பயன்படுத்தி வெடிக்கச் செய்துள்ளார். 

ஒரு வலையொளி காட்சிமடைக் குழுவினர் இதை காணொளியாக எடுத்துள்ளனர். அந்தக் காணொளியில் காரின் உடைமையாளர் தூமஸ் கடைனென் பேசியதாவது:-

டெஸ்லா கார் சிறந்த கார். முதல் 1,500 கி.மீ. தூரத்திற்கு நன்றாக இருந்தது. அதன்பின்னர் பழுதாகத் தொடங்கியது. ஒரு நாள் கார் வழியில் நின்றுவிட்டது. இதனால் இழுவை வாகனம் மூலம், காரை வாங்கிய சேவையாளரின் நிலையத்திற்கு எடுத்துச் சென்றேன்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் அங்கேயே இருந்தது. பின்னர் ஒரு நாள் அங்கிருந்து எனக்கு அழைப்பு வந்தது. காரை பழுது நீக்க முடியாது. முழு மின்கலவடுக்கையும் மாற்றினால்தான் காரை இயக்க முடியும் என்று கூறினர். அதற்கு 20000 யூரோஸ் (இந்திய மதிப்பில் 17 லட்சம் ரூபாய்) செலவாகும் என்றும் தெரிவித்தனர்.

அப்போது, நான் எனது காரை எடுக்க வருகிறேன் என்று சொன்னேன். அத்துடன், காருக்கான கியாரண்டி உள்ளிட்ட எதுவும் இல்லாததால், முழு காரையும் வெடிக்கச் செய்யப் போகிறேன் என்று கூறிவிட்டேன். இதையடுத்து காரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு வந்தேன். இவ்வாறு அவர் பேசுகிறார்.

தூமஸ் கடைனென் பேசி முடித்ததும், தேரை சுற்றி 30 கிலோ அளவிற்கு வெடிப் பொருட்கள் பொருத்தப்பட்டன. பின்னர் அந்த வழியாக பறந்து வந்த ஒரு உலங்கூர்தி, டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் உருவபொம்மையை கீழே போட்டது. எலான் மஸ்க் தலைக்கவசம் அணிந்தபடி அந்த உருவ பொம்மை இருந்தது. அதை டெஸ்லா காரின் ஓட்டுநர் வைத்தனர். அதன்பின்னர், காரை வெடிக்கச் செய்தனர். கார் வெடித்து சிதறும் காட்சியை பல்வேறு கோணங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுp வருகிறது. 

நான் டெஸ்லா காரை ஓட்டும்போதுகூட இந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைந்ததில்லை. மேலும், டெஸ்லாவை வெடிவைத்து தகர்த்த உலகின் முதல் ஆள் நானாக இருக்கலாம். இது வரலாற்றில் இடம்பெறும் என்கிறார் தூமஸ் கடைனென்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,104.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.