Show all

அதிகாரங்களைப் பகிராத நாடுகளே பிளவடைந்துள்ளன

ஒரு நாட்டிற்குள் அதிகாரங்களைப் பகிர்வதால் நாடு பிளவுபடாது. மாறாக, அதிகாரங்களைப் பகிராத நாடுகளே பிளவடைந்துள்ளன என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷே தெரிவித்து வருகின்றார். அந்த அச்சுறுத்தல் எங்கு உள்ளது? உண்மையில் அவரது காலத்தில் காணப்பட்ட அச்சுறுத்தல் இன்று இல்லாமல் போயுள்ளது.

அன்று மஹிந்த லண்டன் சென்றபோது 13 ஆயிரம் புலம்பெயர் தமிழர்கள் வீதியில் இறங்கி போராடினர். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்லும்போது, 130 வரையானவர்கள்தான் போராடினார்கள். இதிலிருந்து எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளதென்பது தெரிகின்றது.

இன்று தேர்தலில் போட்டியிடும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் கட்சியும் அதிகாரத்தை பகிருமாறுதான் கோருகின்றனர். அவர்கள் தனி நாட்டைக் கோரவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிகாரத்தை பகிருமாறுதான் கேட்கின்றது. நாட்டை பிரிக்கமாறு இன்று யாரும் கேட்கவில்லை. எமது தேர்தல் அறிக்கையிலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர்வதாகத்தான் குறிப்பிட்டுள்ளோம்.” என்றுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.