02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5127: தமிழ்நாடு நாள் என்பது தமிழருக்கென்று தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் நாளாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்த நிலையில் அதை இந்திய அரசு ஏற்க மறுத்து வந்தது. ஆனால் இக்கோரிக்கை முதலில் ஆந்திர மக்களால் கடுமையாக முன்னெடுக்கப்பட்டது. கலவரங்களும் ஏற்பட்டன. இதனால் இந்திய ஒன்றிய அரசு வேறு வழியின்றி நாளது 16, ஐப்பசி, தமிழ்த்தொடராண்டு-5058 (01.11.1956) வியாழம் கிழமை அன்று இந்தியாவை மொழிவழி மாநிலங்களாகப் பிரித்தது. இதன்படி, சென்னை மாநிலத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் நிறுவப்பட்டன. சென்னை மாகாணத்தின் எஞ்சிய பகுதிகளோடு, திருவிதாங்கூரின் தமிழ் பகுதிகளும் இணைக்கப்பட்டு சென்னை மாநிலம் தமிழுக்கான பகுதியாக அறியப்பட்டது. மொழிவழியாக பிரிக்கப்பட்ட மாநிலங்களில் மாநிலம் உருவான நாளை அந்தந்த மாநிலங்கள் அரசு விழாவாகவும், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் அரசு விடுமுறை நாளாகவும் அறிவித்து கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழ் நாட்டில் அப்படியான விழாவானது அரசு சார்பில் கொண்டாடப்படாமலும், மாநிலத்தின் பழைய பெயரான சென்னை மாநிலம் என்ற பெயரும் தொடர்ந்து வந்தது. சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப்பெயரிடக் கோரி தனி நபராக சங்கரலிங்கனார் எனும் முதியவர் 76 நாட்கள் சாகும் வரை உண்ணாநிலை மேற்கொண்டு இறந்தார். சென்னை மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வந்து முதல்வராக அறிஞர் அண்ணா பொறுப்பேற்ற பிறகு நாளது 03,ஆடி தமிழ்த்தொடராண்டு-5070 (18.07.1968) இல் சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு எனப்பெயர் மாற்ற சென்னை மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு 01, தை, தமிழ்த்தொடராண்டு-5070 (14.01.1969) தைப் பொங்கலன்று தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது. மொழிவழியாக பிரிக்கப்பட்ட கேரளா, ஆந்திரா, கருநாடகம் போன்ற மாநிலங்கள் அந்த நாளை மாநில நாளாகக் கொண்டாடி வருவதுபோல, சென்னை மாநிலம் தமிழ்மாநிலமாக இருந்து கொண்டிருக்கிற நிலையில், தமிழுக்கான மாநில நாளை சிறப்பாக கொண்டாடவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இதை சில தமிழ் அமைப்புகள் நவம்பர் முதல் நாளன்று விழாவாக கொண்டாடி வந்தன. குறிப்பாக நா. அருணாச்சலம் அவர்களால் உருவாக்கப்பட்ட சான்றோர் பேரவை அமைப்பால் தமிழ்நாடு மாநிலம் அமைந்த பெருவிழா என்ற பெயராலும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியால் தமிழகப் பெருவிழா என்ற பெயராலும் இந்த விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாக்களின்போது இந்த விழாவை தமிழ்நாடு அரசு நடத்தவேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இந்த நெடுநாள் கோரிக்கையானது தமிழ்நாட்டு அரசால் ஏற்கப்பட்டு 25 அக்டோபர் 2012 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ரூ 10 இலட்சம் ஒதுக்கப்பட்டு 2019 நவம்பர் முதல் நாளில் அரசு விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் 2021 இல் புதியதாக பொறுபேற்ற மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசால் சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக, சூலை 18 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. நவம்பர் முதல் நாளை மாற்றி சூலை 18 அன்று தமிழ்நாடு நாள் என அறிவித்ததற்கு சிலவேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அறிவிப்புக்கு எதிராக சிலவேறு தமிழ்த் தேசிய அமைப்புகளும், நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, எடப்பாடி க. பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், சீமான், ச. இராமதாசு, உள்ளிட்ட அரசியல்வாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தாங்கள் வழக்கம்போல நவம்பர் முதல் நாளன்று தமிழ்நாடு விழாவைக் கொண்டாடப்போவதாக சில தலைவர்கள் தெரிவித்தனர். சென்னை மாநிலத்தின் பேரளவு தமிழ்ப்பகுதியில் பிறமொழியினங்களுக்காக துண்டாடப்பட்ட நாளே நவம்பர் ஒன்று. அந்த நாளின் தொடர்ச்சியாக துண்டாடப்பட்ட பகுதிகள் மீட்புக்கான பல பல போராட்டங்களை எல்லாம் சந்தித்திருக்கிறது எஞ்சிய சென்னை மாநிலப்பகுதி. பிள்ளைகள் எல்லாம் பேரளவு சீதனத்தோடு தனிக்குடித்தனம் போன நாள் ஒரு பெற்றோருக்கான தனிஅதிகார நாள் ஆகிவிட முடியாது. குறிஞ்சிமலர் பூப்பதற்கு எடுத்துக் கொள்கிற பனிரெண்டு ஆண்டுகள், ஒருபிள்ளை கல்விக்கு செலவிடுகிற பனிரெண்டு ஆண்டுகள் சென்னை மாநிலம் தமிழ்நாடாக மாற்றம் பெறுவதற்குத் தேவைப்பட்டது. அந்த மாற்றத்தின் பேரடையாளமாக திராவிட முன்னேற்றக் கழக அரசை நிறுவிய அண்ணாவால் தமிழ்நாடு என்கிற பெயர் நமக்கு மீண்டும் கிடைத்தது. ஆம்! தமிழ்நாடு என்கிற அடையாளத்திற்கு முதலாவது சொந்தமான பகுதி நாவலந்தேயம் என்கிற பெயரில் இருந்த ஒட்டுமொத்த இந்தியா என்பதே வரலாறு. அந்தத் தமிழ்நாடு நாளை, தமிழ்நாடு அரசு, தமிழ்வளர்ச்சித்துறை மூலமாக இன்று சிறப்பாக முன்னெடுத்தது. சென்னை அடையாறு முத்தமிழ்ப் பேரவை அரங்கத்தில் இன்று காலை 10.15 அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் ஒளவை அருண் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை செயலாளர். வே.இராசாராமன் இ.ஆ.ப முன்னிலை வகித்தார். கருத்தரங்கத் தலைமை : மரு.ஜெ.இராஜமூர்த்தி இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், சென்னை பேரறிஞர் அண்ணாவும் தமிழும் : வழக்கறிஞர் த.இராமலிங்கம் இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு : கலைமாமணி திருமதி தேச மங்கையர்க்கரசி இமய நெற்றியில் எழுதுக தமிழ்நாடு : கவிஞர் நெல்லை ஜெயந்தா தமிழ்நாடு என்றால் தனியின்பம் தானே : திருமதி ரேகா மணி தமிழ்நாடு நாள் விழா முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை. பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியொப்பளிப்பு அரசாணை வழங்கி விழாப் பேருரை: என்கிற பொருள் நிரல் வரிசையில் விழா சிறப்பாக நடந்தேறியது.
திரு.த. வேலு, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர்,
திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள். மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
திருமதி கு.ப.சத்தியபிரியா, தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்
நாட்டுப்பண்
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.