Show all

இரண்டு மகளிர் கல்லூரிகள் குதித்தன! தூத்துக்குடியில் 54வது நாளாகத் தொடரும் ஸ்டெர்லைட் போராட்டத்தில்

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், ஆலை விரிவாக்கப்பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆலையின் அருகே உள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் இன்று 54வது நாளாக அங்குள்ள மரத்தடியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக செயின்ட்மேரீஸ் மகளிர் கல்லூரியும், ஹோலிகிராஸ் மனையியல் கல்லூரியும், இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு திமுக சார்பில் தூத்துக்குடி எம்எல்ஏ கீதாஜீவன், திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதாராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாநில தலைவர் பாலகிருஷ்ணன், பாமக கட்சியின் சார்பில் தலைவர் ஜி.கே.மணி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மற்றும் தமிழ் தேசிய கூட்டணி அமைப்புகள், இடதுசாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆதரவு தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியினர் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் குமரெட்டியாபுரம் கிராம மக்களுக்கு ஆதரவாக ஏற்கனவே பண்டாரம்பட்டி, வடக்கு சங்கரப்பேரி, தெற்கு வீரபாண்டியாபுரம், மடத்தூர், மீளவிட்டான் மக்கள் தங்கள் கிராமத்திலேயே கூடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று 7வது கிராமமாக சில்வர்புரமும் இணைந்துள்ளது. அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் திரண்ட அந்தக் கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அவர்களுடன் போராட்டத்தில் அருகில் உள்ள பாலையாபுரம், சுப்பிரமணியபுரம் மக்களும் பங்கேற்றனர். சில்வர்புரத்தில் இன்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திமுக சார்பில் தூத்துக்குடி முன்னாள் பாஉ ஜெயதுரை தனது ஆதரவாளர்களுடன் வந்து குமரெட்டியாபுரம் கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். தூத்துக்குடி டவுனில் கடற்கரைச் சாலையில் உள்ள செயின்ட் மேரீஸ் பெண்கள் கல்லூரியும் மற்றும் ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியும் வளாகத்தில் அமர்ந்திருந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,750.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.