Show all

தமிழறிஞர்கள் அஞ்சலி! பிரபல பட்டிமன்ற நடுவர் அறிவொளி காலமானார்

26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: எண்பத்தொரு அகவை எய்திய அறிவொளி அவர்கள் நாகப்பட்டினம் வட்டம் சிக்கல் கிராமத்தில் பிறந்தவர். கல்லூரி படிப்பை தஞ்சையில் முடித்தார். அதன் பிறகு  அரசு வேலை உட்பட பல்வேறு இடங்களில் ஆசிரியர் பணியாற்றியவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், பூம்புகார் கல்லூரியிலும் பேராசிரியராக பணிபுரிந்தார். பணிக்குப் பிறகு திருச்சியில் குடிபெயர்ந்த அறிவொளி, வித்துவான் மற்றும் கலைமுதுவர் பட்டப்படிப்பு படித்தவர். இலக்கியக் கூட்டங்களில் பேச தொடங்கி, அடுத்து பட்டிமன்றங்களில் பட்டையைக் கிளப்பினார். 

காரைக்குடி கம்பன் கழகத்தின்மூலம் தமிழுக்கு தலையாய பணிகள் ஆற்றினார். குன்றக்குடி அடிகளார், அ.ச.ஞானசம்பந்தம் போன்ற புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர்களுடன் பேசி தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்.  

மேலும், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் படைப்புகள் உள்பட ஆயிரக்கணக்கான தலைப்புகளில் பட்டிமன்றங்களில் பேசியவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டிமன்ற நடுவராக விளங்கினார். முதல்முறையாக வழக்காடு மன்றம் என்னும் அமைப்பை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர். இவரது திறமையைப் பாராட்டி ஆய்வுரை திலகர், கபிலவாணர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.  அண்மையில், வாழ்நாள் சாதனை விருது பெற்றார்.

இவரின் தமிழுக்கு தமிழகம், இந்தியா மட்டுமல்லாமல், அமெரிக்கா, கனடா, பாரிஸ், குவைத், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் சுவைஞர்கள் உண்டு. இலக்கிய மேடைகள் மட்டுமல்லாது, திரைப்படம், சின்னத் திரை தொடர்களிலும்  நடித்துள்ளார். பேச்சாற்றல் மட்டுமல்லாது தமிழில் எழுத்தாற்றலிலும் வல்லவரான  இவர், சுமார் 120-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 

பட்டிமன்றப் பேச்சாளர் மட்டுமல்லாமல், இயற்கை வைத்திய முறையில் மக்களுக்கு சிகிச்சையும் அளித்துவந்தார்.  

அண்ணார் அறிவொளி அவர்கள் நேற்றிரவு காலமானார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,782.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.