Show all

இன்று தந்தையர் நாள்

03,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று தந்தையர் நாள். இது ஐரோப்பிய மரபுதான் ஆனாலும் உலகம் முழுவதும் அன்னையர் நாள், தந்தையர் நாள், காதலர்நாள், தமிழ்இன அழிப்பு நினைவுநாள் இப்படியெல்லாம் ஒவ்வொரு நாளையும் ஒரு தலைப்பிட்டு அந்ததந்தத் தலைப்பிற்கான வகையைப் போற்றிக் கொள்வது உலக மரபாகி கொண்டாடப் பட்டு வருகிறது.

இந்தத் தந்தையர் நாளை புரிந்து கொள்வதற்கும், கொண்டாடுவதற்கும் இரண்டு குறள்களை நமக்கு தந்திருக்கிறார் திருவள்ளுவர். 

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, 'இவன் தந்தை

என் நோற்றான்கொல்!' எனும் சொல்.

நீங்கள் தந்தையாக இருந்தால் இந்த நாளில் திரும்பிப் பார்க்க வேண்டியதும் திருத்திக் கொள்ள வேண்டியதும்: நம்முடைய மகனின் முன்னேற்றத்திற்கு நாம் செய்ய வேண்டியவைகளைச் சரியாகச் செய்தோமா? மகனை குறைபட்டுக் கொண்டு, அல்லது நம்முடைய இயலாமைகளை அவன் மீது திணித்து, உரிய நன்றிகளைச் செய்யாமல் போனோமா? என்பதாகும்.

நீங்கள் மகனாக இருந்தால், தந்தை எள் என்றால் நாம் எண்ணெயாக நின்றோமா? தந்தை தன் தகுதிக்கு மீறி நம் முன்னேற்றத்திற்கு முன்னெடுத்தவைகளை புரிந்து கொண்டோமா? என்று திருப்பிப் பார்ப்பதாகும்.

நம்முடைய குடும்ப அமைப்பு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த செழுமையான அமைப்பு. 

நம்முடைய சமுதாய அமைப்பும் குடும்ப அமைப்பு போலவே செழுமையானது தாம். அதனாலேயே உலகின் மாமன்னர்கள் அந்தப்புரங்களில் சிந்தனையை இருத்திய போது நமது தமிழ் மன்னர்கள், அணை கட்டியவர்களாகவும், மாடுகட்டி போராடித்தால் மாளாது என்று யானை கட்டி போராடித்தவர்களாகவும், முல்லைக்குத் தேர் தந்தவர்களாகவும், மயிலுக்கு போர்வை தந்தவர்களாகவும், புலவர்களை கவரி வீசி பாதுகாத்தவர்களாகவும், இருந்தார்கள்.

இன்றைக்கு தமிழ்ச் சமுதாய அமைப்பு தமிழர்களிடம் இல்லை, அயலவர்களிடமோ அயலவர்கள் பாதத்தை நக்கிப் பிழைப்பு நடத்தும் வீணர்களிடமோ இருக்கிறது. அதனாலேயே நடக்கிறது 13 பச்சைப் படுகொலைகள். மணல் கொள்;ளைகள். டாஸ்மாக் கடைகள்.

இந்தச் சமுதாய அமைப்பில் தந்தையர்களின் குடும்ப நகர்த்தலே பெரும்பாடாகிக் கிடக்கிறது.  பத்தாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளாக தமிழ்க் குடும்பங்கள் தொழில் செய்துதான் குடும்பத்தை நிருவகித்து வருகின்றன.

எந்த அரசும் தொழில் செய்தே நாட்டையும் நிருவகிக்க முடியும். மக்களிடம் எளிமையாகப் பெறும் வரிகள் மூலம் நாட்டை நிருவகிக்கும் வாய்ப்பின் காரணமாகத்தான் எல்லோரும் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள். அரசுக்கு சாராயக்கடை நடத்தும் வாய்ப்பும் இருப்பதால் எதற்கும் கையாலாகாதவர்களும் கூட போட்டியில் இணைந்து கொள்கிறார்கள். வரிகளைப் பெறுவதற்கான துறைகள் அனைத்தும் மறுஉற்பத்தி சாராத இழப்பு மட்டுமே என்கிற ஒருவழிப் பாதையாகி மக்களின் உழைப்பு ஏராளமாக வீணடிக்கப் படுகிறது. உழைக்கும் மக்களுக்கு வரி ஏய்பாளர்கள் என்று பட்டம். தண்டிப்பதற்கு அறங்கூற்றுமன்றங்கள். வரி என்ற பெயரில் உழைப்பைச் சுரண்டுவது குற்றமா? உழைப்புச் சுரண்டலுக்கு உட்பட மறுப்பது குற்றமா? போகாத ஊருக்கு நான் வழி சொல்லவில்லை.

என் தமிழ்க்குடும்பம் பத்தாயிரத்திற்கு மேலான ஆண்டுகளாகப் பயணித்துக் கொண்டிருக்கிற வழியைதான் காட்டுகிறேன். தமிழ்க்குடும்பம் தம்மையும் காத்துக் கொண்டு தம்மைப் பிணைத்துள்ள அயல்சட்ட சமுகத்திற்கு வரியும்செலுத்திக் கொண்டுதானே பயணித்துக் கொண்டிருக்கிறது. 

நம் குடும்பம் நம்கையில்தான் இருக்கிறது. நம் குடும்பத்தின் மிகச் சிறிய சலசலப்புக்கும் கூட நாம் இழந்து நிற்கிற சமுதாய அமைப்புதான் காரணமாக இருக்கிறது. சமுதாய அமைப்பை மீட்டு, நமது தந்தையரின் உழைப்பை எளிமைப் படுத்துவதுதான் தந்தையர் நாளில் நமது கடமையாக இருக்க முடியும். அயலவர்களை அப்புறப் படுத்துவோம்; வீணர்களை விரட்டுவோம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,821.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.