Show all

புலிகள் நடமாட்டம் கிடுகிடு உயர்வு, முண்டந்துறை வனப்பகுதிகளில்! சுற்றுலா பயணிகளுக்கு தடை எதிரொலி

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், வனவிலங்குகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தியா முழுவதும் 37 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் ஆகியவை உள்ளன. அதில் ஆனைமலை புலிகள் காப்பகம் கோவை மாவட்டத்திலும், முதுமலை புலிகள் காப்பகம் நீலகிரியிலும் வருகிறது. நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது. 

அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் பகுதியில் வன உயிரினங்களின் இனப்பெருக்கம், விலங்கினங்கள் வாழ்விடத்தை அமைத்துக் கொள்ளுதல் வனத்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக கடந்த இரண்டு மாதங்களாக முண்டன்துறை பகுதிக்கு செல்லும் சுற்றுலா போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த வனப்பகுதிகளில் வன உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 

அதன் வாழ்விடங்கள் வனத்துறையினரால் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு படக்கருவி மூலம் கண்காணிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டதன் விளைவாக இதுவரை இல்லாத அளவில் முண்டந்துறை வனப்பகுதியில் ஏராளமான அளவில் புள்ளிமான்கள், கடமான்கள், காட்டு மாடுகள், யானைகள், செந்நாய்கள், மற்றும் சிறுத்தைகள் பெருமளவில் நடமாடுவதாக கணக்கிடப் பட்டுள்ளது. அதனை முண்டன்துறை வனச்சரக வன அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும், வனப்பகுதிகளில் விலங்குகளின் நடமாட்டங்களையும் துல்லியமாக படமெடுத்து அந்த படங்களையும் வெளியிட்டு உள்ளனர். 

வனப்பகுதிகளில் மனிதனின் நடமாட்டம் இல்லாமல் இருந்தால் அங்குவாழும் அரியவகை உயிரினங்கள் இனபெருக்கம், பெருமளவில் அதிகரிக்கும் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

ஏற்கனவே குற்றாலம் வனப்பகுதியிலுள்ள செண்பகாதேவி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். அதனால் குற்றாலம் முதன்மை அருவி வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,082.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.