Show all

இரவு முழுக்க மழை! வெள்ளக் காடானது சென்னை

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நேற்று மாலை 6 மணிக்கு பிறகு மழை வெளுத்து வாங்க தொடங்கியது. இரவு 11 மணி வரை கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு மெதுவாக மழை பெய்து கொண்டே இருந்தது. இடைவிடாமல் பெய்த பெருமழை காரணமாக சென்னை நகரமே வெள்ளத்தில் மிதப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளக் காடாக மாறின. தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் கிட்டத்தட்ட எல்லா சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். போக்குவரத்து காவல்துறையினர் எவ்வளவோ முயன்று போராடினாலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.

பூந்தமல்லி நெடுஞ்சாலை, ரித்தர்டன் சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, 100 அடி சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பீட்டர்ஸ் சாலை, சர்தார் பட்டேல் சாலை, ஸ்மித் ரோடு, அவுட்டர் ரிங்க் ரோடு, செனடாப் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. இச்சாலைகளில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அடையாறு, மந்தைவெளி, சாந்தோம், புரசைவாக்கம், அயனாவரம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், செக்ரடேரியட் காலனி, காமராஜர் சாலை, பாரிமுனை, கிண்டி உள்ளிட்ட அநேக இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து வௌ;ளமென ஓடியது. தெருக்களிலும் மழைநீர் தேங்கியது.

தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் மின்சார தொடர்வண்டிச் சேவையும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்பட்ட அனைத்து மின்சார தொடர்வண்டிகளும் வேகம் குறைத்து இயக்கப்பட்டன. மழை காரணமாக ஆங்காங்கே 20 நிமிடங்கள் வரை மின்சார தொடர்வண்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஏற்கனவே பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீர் இன்னமும் வடியாத நிலையில், நேற்று பெய்த மழை காரணமாக தேங்கியிருந்த மழைநீர் அளவு அதிகரித்து இருக்கிறது. இதனால் முன்பைவிட குடியிருப்பு பகுதிகள் நீரால் சூழப்பட்டு உள்ளன.

ஏராளமான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து உள்ளது. எந்தெந்த குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதோ, அங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. தேங்கி இருக்கும் மழைநீரை மோட்டார் நீரேற்றிகள் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்தது. தாம்பரம், பல்லாவரம், திருநீர்மலை, சேலையூர், பெருங்களத்தூர், முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மதியத்துக்கு பிறகு இந்த பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்யத்தொடங்கியது.

தாம்பரம் அருகே வரதராஜபுரம் அமுதம் நகர், ராயப்பா நகர், மகாலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகர் பகுதிகளில் மழைநீர் குறைந்த போதிலும் வெள்ள பயத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் இன்னும் வீடுகளுக்கு திரும்பவில்லை. வரதராஜபுரம் பகுதியில் அடையாறு ஆற்றில் வேகமாக வௌ;ளநீரை வெளியேற்ற பொக்லைன் எந்திரம் மூலம் கரையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பகுதியில் வெளிவட்டச் சாலையின் கீழே உள்ள பாலங்களை அகலப்படுத்த வேண்டும் என வரதராஜபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பலத்த மழையில் செம்பாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட பொன்னியம்மன் நகர் பகுதியிலும், திருநீர்மலை பேரூராட்சிக்கு உட்பட்ட ரங்கா காலனி பகுதியிலும் குடியிருப்புகளைச் சுற்றி மழைநீர் தேங்கி உள்ளது. இந்த பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி உள்ளதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.

வரதராஜபுரம் பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரப்பர் படகுகளுடன் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

பெருங்களத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அஞ்சுகம் நகர் பகுதியில் ஏராளமான வீடுகளில் மழைநீர் புகுந்தது. அந்த பகுதியில் இருந்த மக்கள் பெருங்களத்தூரில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று காலை தண்ணீர் குறைந்ததால் ஒரு சிலர் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்தனர். அவர்கள் மழைநீரில் நனைந்த பொருட்களை வீட்டுக்கு வெளியே உலர வைத்தனர்.

பலத்த மழையில் தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உள்ளன. செம்பாக்கம் பெரிய ஏரி நிரம்பியதால் ஆக்கிரமிப்பாளர்களால் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ராஜகீழ்ப்பாக்கம் ஏரியிலும் ஆக்கிரமிப்பு வீடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் உபரிநீர் செல்லும் பகுதியில் ஏரி கரையை உடைக்க சிலர் முயற்சிப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது.

சேலையூர் ஏரியை பார்வையிட்ட காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறும்போது,

ஏரி ஆக்கிரமிப்பாளர்களால் ஏரிகள் உடைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என எச்சரித்தார். இதேபோல பீர்க்கன்காரணை ஏரி நிரம்பிய நிலையில், ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே தண்ணீர் வெளியேறும் வகையில் கரை உடைபட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் ஏரி தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வௌ;ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

-கடல் மட்டத்தில் இருந்து உயரம் குறைவான சென்னையில் மழை பொழிந்தால் நீர் வற்றுவதற்கு காலதாமதம் ஆகும். சென்னையில் உள்ள ஏரிகள் தாம் சென்னை பாதுகாப்புக்கான அரண். ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் மழையின் போது தங்கள் பாதிப்புளை குறைத்துக் கொள்வதற்காக ஏரிகளை உடைத்து, சென்னையை ஒவ்வொரு மழையின் போதும் மூழ்கடிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.