Show all

கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக சென்ற சூப்பர் கார்கள் பறிமுதல்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஃபெராரி, லாம்போகினி, மெர்சிடீஸ் போன்ற உயர்ரக 10 சூப்பர் கார்களை கொண்டு அத்துமீறி பந்தயம் நடத்தியுள்ளனர்.

     இதனையடுத்து, அதிவேகமாக பந்தய ஓட்டம் நடத்தியது, மற்றும் தாறுமாறாக ஒட்டிய காரணத்தால் கிழக்கு கடற்கரை சாலை சுங்கச்சாவடி அருகே வாகனங்களை நிறுத்தி காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

     இறக்குமதி செய்யப்பட்ட இந்த அதிவேக சொகுசு கார்களின் மதிப்பு கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

     நேற்று காலை 7 மணி அளவில் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து மகாபலிபுரம் நோக்கி அதிவேகக் கார்களை கொண்டு அதிவேகமாக சென்றிருக்கிறார்கள் என்று காவல்துறை தரப்பு கூறுகிறது.

     கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் 60 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பயணிக்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், நேற்று காலை கார் ஓட்டியவர்கள் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளனர். மேலும் பலத்த சத்தத்தினால், பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளனர் என்று காவல் துறை வட்டாரங்கள் தகவல் கூறுகிறது.

     ஆனால் காரை ஓட்டிய நபர்கள்,

‘தாங்கள் கார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு காலை உணவு நிகழ்ச்சிக்கு தான் சென்று கொண்டிருந்தோம்’ என்று கூறுகின்றனர்.

     கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் வசிக்கும் மக்கள், வார இறுதி நாட்களில் வாகனங்கள் தொடர்ச்சியாக அதிவேகத்தில் செல்வதாகவும் அதனால் தாங்கள் வசிக்கும் பகுதியில் நடப்பதற்குக் கூட அச்சம் இருப்பதாகவும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவல் துறையினர், கிழக்கு கடற்கரை சாலையில்; வார இறுதி நாட்களில் காலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

     நேற்று காலை கார்கள் கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதியில் அதிவேகமாக சென்றபோது காவலர்கள் கார்களை நிறுத்தச் சொன்னார்களாம். ஆனால், நிறுத்தாமல் போகவே உத்தாண்டி சுங்கச்சாவடியில் கார்களை மடக்கி பிடித்துள்ளனர். இதன் பிறகு பறிமுதல் செய்யப்பட்ட கார்களை காணத்தூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர் காவலர்கள்.

     இந்தச் சம்பவம் தொடர்பாக, கார்களை ஓட்டியவர்கள் சமூக வலைதளங்களில்,

     ‘இந்த அதிவேகக் கார்கள் 50 கிலோ மீட்டர் வேகத்தில் போனால் கூட சத்தம் அதிகமாகவே கேட்கும். அதை தவறாக புரிந்து கொண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.’ என்று பதிவிட்டுள்ளார்கள்.

     சொத்து குவித்தால் தண்டனை; சொத்தை தாறுமாறகப் பயன் படுத்தினால் பறிமுதல்!

     சொத்து குவித்தால் பறிமுதல்; சொத்தை தாறுமாறகப் பயன் படுத்தினால் தண்டனை என்பதல்லவா சரியாக இருக்க முடியும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.