Show all

தமிழகம் முழுவதும் 4,000 பேருந்து சேவை திடீரென குறைப்பால், மக்கள் அவதி

15,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில், இயக்கப்படும் 23,400 அரசு பேருந்துகளில் 2.4 கோடி பேர் பயணம் செய்கின்றனர். அடிக்கடி உயரும் டீசலின் விலை, உதிரி பாகங்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வருவாய்க்கும், செலவுக்கும் இடையே உள்ள வேறுபாடு தினமும் ரூ.6.5 கோடியாக இருக்கிறது. அரசு போதிய அளவில் நிதி ஒதுக்காத நிலையில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை.

      இதனால், பழைய பேருந்துகள் இயக்கப்படுவது 70 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களின் வருவாயைப் பெருக்குவது தொடர்பாக தமிழக அரசு உயர் அதிகாரிகள் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தனர். இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நட்டத்தைக் குறைக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 500 பேருந்துகளின் சேவை மட்டுமே நிறுத்தப்பட்டது. தற்போது 4,000 பேருந்துகளின் சேவை குறைக்கப்பட்டுள்ளது.

      குறிப்பாக, சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களிலும், மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் சேவையும் அதிக அளவில் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், போதிய அளவில் பேருந்து வசதி கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

      இதுதொடர்பாக போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அரசு போக்குவரத்துக் கழகங்களில் வருவாயை அதிகரிப்பது, செலவுகளைக் குறைப்பது, இழப்புகளை எப்படித் தவிர்ப்பது, பயணிகளுக்கு தரமான சேவை வழங்குவது உள்ளிட்டவை குறித்து பல்வேறு கட்டங்களாக போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குநர்களை அழைத்து தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டது. பல்வேறு முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

      குறிப்பாக, பேருந்துகளின் இயக்கத்தை முறைப்படுத்த வேண்டும். ஒரே வழித் தடத்தில் ஒரே நேரத்தில் கூடுதல் பேருந்துகள் செல்வது குறித்து ஆராய்ந்து பேருந்து சேவைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

      ஆனால், பேருந்துகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர் விடுமுறை மற்றும் விழா நாட்களில் தேவை அதிகரிக்கும்போது முழு அளவிலான அரசு பேருந்துகளும் இயக்கப்படும் என்றனர்.    பேருந்து சேவையைக் குறைப்பது அரசு நிருவாகத்திற்கு அழகல்ல! கூட்டம் குறைவாக உள்ள பகுதிகளுக்கு சிறு பேருந்துகளை இயக்கம் முயற்சியை மேற்கொள்ளலாம்.

      -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,652

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.