Show all

முகாந்திரமின்றி ரவுடி பட்டியலில் யாருடைய பெயரும் தொடரக் கூடாது: உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளை

11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவல்துறையின் ரவுடி சரித்திர பட்டியலில் உள்ள தங்களது பெயரை நீக்கக்கோரி, ஏராளமான மனுக்கள் உயர்அறங்கூற்றமன்ற மதுரைக் கிளையில் பதிகை செய்யப்பட்டிருந்தன.  இந்த மனுக்களை விசாரித்த அறங்கூற்றுவர் என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: 

ரவுடி சரித்திர பட்டியலை பராமரிப்பது குறித்து காவல் துறை நிலையாணை 741 முதல் 748 வரையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதன்படி பட்டியல் தயாரிக்கப்பட்ட  குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, கட்டாயம் பட்டியலில் உள்ளவர் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். அவர் தொடர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளரா, அவரது பெயரை  பட்டியலில் தொடர வேண்டிய அவசியம் குறித்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஆய்வு செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்டவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை. அவரது பெயரை ரவுடி சரித்திர பட்டியலில் வைத்திருக்க வேண்டியது இல்லை என்றால்,  உடனடியாக அவரது பெயரை நீக்க வேண்டும். தேவையில்லாமல் ரவுடி சரித்திர பட்டியலில் தொடர வேண்டியதில்லை. பட்டியலை மறு ஆய்வு செய்ய  வேண்டியது காவல்துறையினரின் கடமை. இது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமை. 

இந்த நடைமுறையை இனியாவது காவல்துறையினர் பின்பற்றுவார்கள் என  இந்த அறங்கூற்றுமன்றம் நம்புகிறது. எனவே, ரவுடி சரித்திர பட்டியல் தயாரிப்பது, பட்டியலை முடிப்பது குறித்து மாவட்ட, மாநில காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் தேவையான விழிப்புணர்வை  காவல்துறையினரிடம் ஏற்படுத்த வேண்டும். 

இனி இதுபோன்ற வழக்குகளில் காவல் துறை நிலையாணை பின்பற்றப்படாமல் இருக்கிறது எனத்தெரிந்தால், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க  உத்தரவிடப்படும். இந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட ஆய்வாளரின்; மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவிடப்படும்.இவ்வாறு அறங்கூற்றுவர் உத்தரவிட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,923.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.