Show all

கூட்ட நெருக்கடி, பரபரப்பில் குழந்தையை நடைமேடையில் விட்டுவிட்டு தொடர்வண்டி ஏறிய பெற்றோர்

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாகர்கோவில் தொடர்வண்டி நிலையம். பரபரப்பு நிறைந்த மாலை நேரம். பெட்டி படுக்கைகளுடன் நெரிசல்களில் அவசர அவசரமாக மக்கள் கூட்ட தலைகள். தொடர்வண்டி நிலையத்தில் சென்னை செல்ல வேண்டிய கன்னியாகுமரி விரைவு வண்டி சரியான நேரத்தில் புறப்பட்டது.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த நடைமேடையில் 5 அகவையுடைய குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. அதனை பார்த்த பயணிகளோ, குழந்தையை அழைத்து செல்ல யாராவது வருவார்கள் என்று சற்று நேரம் அங்கேயே நின்று, சுற்றுமுற்றும் பார்த்தனர். யாருமே வரவில்லை. குழந்தையோ அழுகையை நிறுத்தவில்லை. இதனால், தொடர்வண்டித் துறை பாதுகாப்பு படை காவலர்களிடம் பயணிகளே குழந்தையை அழைத்து சென்று ஒப்படைத்தனர்.

இதையடுத்து காவலர்களோ அந்த குழந்தையை அழைத்துக் கொண்டு அந்த முதலாவது நடைமேடையில் நின்று போவோர் வருவோர்களை விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது, புறப்பட்டு சென்று கொண்டிருந்த அந்த தொடர்வண்டியானது அபாய சங்கலியால் இழுக்கப்பட்டு நின்றது. தொடர் வண்டிநின்றதும் அதிலிருந்து ஒரு இணையர் அரக்க பறக்க நடைமேடையில் இறங்கி பதறியடித்து வேகமாக ஓடி வந்தனர். முதல் நடைமேடையிலேயே காவலர் குழந்தையுடன் நின்றிருந்ததை கண்டதும், அந்த பெண் ஐயோ, என் குழந்தை... என் குழந்தையை கொடுங்கள் என வாங்கினார்.

பின்னர் இணையரிடம் காவலர்  விசாரணை நடத்தினர். தொடர் வண்டிகிளம்பிவிட்டதால், கணவனிடத்தில் குழந்தை இருக்கும் என மனைவியும், மனைவிதான் குழந்தையை வைத்திருப்பாள் என கணவனும் நினைத்து தனித்தனியாக பெட்டிகளில்; ஏறி உள்ளனர்.

உள்ளே சென்றதும், அவசரத்தில் குழந்தையை நடைமேடையிலேயே விட்டு சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து இணையருக்கு கண்டிப்பு கலந்த அறிவுரையை கூறி குழந்தையை ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் காரணமாக கொஞ்ச நேரம் தொடர்வண்டிநிலையமே பரபரப்பாக காணப்பட்டது.

பேருந்துக் கட்டணத்தைக் காட்டிலும் கட்டணம் குறைவாக இருப்பதாலேயே ஏழை மக்கள் தொடர் வண்டியை நாடுகின்றனர். தொடர் வண்டியில் கொஞ்சம் கூடுதல் பெட்டிகளை இணைத்து கூட்ட நெருக்கடியையும் அதன் பாற்பட்ட பரபரப்பையும் குறைக்க முயலலாம் அரசு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,814. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.