Show all

காற்றில் ஆடின கருப்புக் கொடிகளாய்! வானில் மிதந்தன கரும்பலூன்களாய்! மோடியின் மீதான தமிழர் வெறுப்புணர்ச்சி

29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடிக்கு எதிரான போராட்டம் களத்தில் மட்டுமன்றி இணையதளத்திலும் தீவிரமடைந்து காவிரி விவகாரத்தை உலக அளவில் பேசு பொருளாக்கி விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து தாமதப்படுத்தி வரும் நடுவண் அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

ஆளும் கட்சியான அதிமுக, மற்றும் நோட்டாவை விட குறைந்த செல்வாக்கு உள்ள பாஜகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும், அரசியல் இயக்கங்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. 

தமிழகத்தில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டி நடப்பது தமிழர்களின் போராட்ட உணர்வை சிதைக்கும் என்று எச்சரித்தும்,  போட்டி நடத்தியதால், பல்வேறு அரசியல் அமைப்பினர் திரண்டு போராட்டம் நடத்திய சூழ்நிலையில், ஆயிரக்கணக்கானோர் போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தின் வெளியே திரண்டதால் பெரும் கலவர சூழ்நிலை உருவாகியது. எப்படியோ போட்டி நடந்து முடிந்த நிலையில், இனி சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்காது என்று ஐபிஎல் நிர்வாகம் பயந்து பின்வாங்கியது. இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதமானது. 

இதனையடுத்து சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடக்கும் நடுவண் பாதுகாப்புத்துறையின் ராணுவக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வந்துள்ள தலைமை அமைச்சர் மோடிக்கு அனைத்து அரசியல் கட்சி சார்பில், கறுப்புக்கொடி ஏந்தி எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டம் நடந்தது. இதில் சென்னை மட்டுமில்லாது தமிழகத்தின் பல இடங்களிலும் மக்கள் போராட்டம் நடத்தினர். கறுப்பு பலூன்களும் பறக்கவிடப்பட்டன, இந்த எதிர்ப்புக்கு பயந்து, பிரதமரின் பயணங்கள் அனைத்தும் தனி விமானம், உலங்கு வானுர்தி என விண்வெளி மார்க்கமாகவே திட்டமிடப்பட்டது. 

அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டம் என்றால் எதோ ஆள் வைத்து சேர்த்த கூட்டம் என்றும், உண்ணாநிலை என்று சொல்லிவிட்டு திரைக்கு பின்னால் பிரியாணி சாப்பிட்ட போராட்டம் போல அல்லாமல், இந்தக் கறுப்புக்கொடி ஏந்தும் போராட்டம் பல இடங்களிலும் உணர்வுப் பூர்வமாக நடைபெற்றது. உடல் நலிவுற்று இருக்கும் நிலையிலும், கறுப்புச்சட்டை அணிந்து கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார். அதே நேரத்தில் 77 அகவை திமுக தொண்டர், அறிவாலயம் முன் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, மோடியைத் திரும்பிப் போகச் சொல்லி முழக்கமிட்டார். எதோ அரசியல் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்துகிறார்கள் என்று தவிர்த்து விட முடியாத அளவிற்கு, பொதுமக்களும் தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில் கறுப்புச்சட்டை அணிந்தும், வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். விழுப்புரம், கடலூர், மதுரை, திருச்சி, கோவை, காஞ்சிபுரம் என பல்வேறு மாவட்டங்களில் இருக்கக்கூடிய சின்னஞ்சிறு கிராம மக்களும் தங்களது எதிர்ப்பை காட்டும் வகையில் தங்கள் கிராமங்கள் தோறும் கறுப்புக் கொடியை பறக்கவிட்டனர். பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களும் இந்தப் போராட்டத்தில் கறுப்புக்கொடி ஏந்தினர். 

களத்தில் மட்டும் இல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் மோடிக்கு எதிரான பதிவுகளால் சமூக வலைத்தளங்களில் இன்றைய பேசுபொருள் தமிழகத்தின் மோடி எதிர்ப்பும், காவிரி விவகாரமும் என்று ஆகிப்போனது. 

#GoBackModiஎன்கிற ஹேஷ்டேகில் தமிழர்கள் மோடி எதிர்ப்பை பகிர, சில நிமிடங்களில் இந்திய அளவில் டாப் ட்ரெண்டான இந்த ஹேஷ்டேக், ஒருகட்டத்தில் உலக ட்ரெண்டிங்கில் நான்காவது இடத்தை பிடித்தது. ஒரு நாட்டின் தலைமை அமைச்சருக்கு அந்நாட்டைச் சேர்ந்த ஒரு மாநிலத்தின் மக்கள் இப்படி எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களே ஏன் என்கிற கேள்வியை உலக அளவில் மக்களை கேட்கச் செய்தது. அதே நேரம் சிலர் இந்திய விடுதலைப் போராட்டத்தோடு, இன்றைய மோடி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிட்டு பதிவுகளும் போட ஆரம்பித்தனர். 

இப்படி நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் ஏன் தமிழக மக்கள் உங்களை எதிர்க்கிறார்கள் என்று தெரிகிறதா தலைமை அமைச்சர் மோடி அவர்களே. நீங்கள் காவிரி விவகாரத்தில் மட்டுமல்ல, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, நீட் விவகாரம் என எந்த விசயத்திலும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. தற்போதைய ஆட்சியாளர்களைப் பணியவைத்ததன் மூலம், ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்று நினைத்தால்.. மன்னிக்க வேண்டும் மோடி அவர்களே, இது நீங்கள் நினைக்கும்படியான மண்அல்ல! இங்கு அரசியலும் வேறு, மக்களும் வேறு. காரணம் நாங்கள் நெடிய பாரம்பரியம் உள்ள தமிழர்கள்! உலகின் அறிவின் முன்னோடிகள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,755.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.