Show all

ரூ.33 லட்சம் மதிப்பிலான ரூ.10 நாணயங்களை வாங்க வங்கி மறுப்பு

வங்கியில் வைக்க இடம் இல்லாததால் ரூ. 33 லட்சம் மதிப்பிலான ரூ.10 நாணயங்களுடன் வைப்பு செய்ய வந்த பால் நிறுவனத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

     கடந்த நவம்பர் மாதம் கருப்புப் பணத்தை ஒழிக்க என்று நடுவண் அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டது. அதாவது ரூ.500, ரூ.1000 ரூபாய்தாள்கள் செல்லாது என்று. இதனால் ரூ.50, ரூ.100க்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

     இதைத் தொடர்ந்து ரூ. 10 நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் விடப்பட்டன. ரூ.2000 ரூபாய்தாள்கள்; விடப்பட்டிருந்த போதிலும் ரூ.100, ரூ.50 ரூபாய்தாள்கள்;; இல்லாததால் சில்லறை வழங்குவதில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.

     இந்நிலையில் ரூ.10 நாணயங்கள் செல்லாது என்று சமூக வலைதளங்களில் செய்தி வேகமாக பரவின. இதைத் தொடர்ந்து வியாபாரிகளும், பொதுமக்களும் ரூ.10 நாணயத்தை பெற்றுக் கொள்ள தயங்கினர். இந்நிலையில் தங்களிடம் உள்ள நாணயங்களை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் மக்கள் குழம்பினர்.

     ரூ.10 நாணயங்கள் செல்லாது என்று சமூகவலைதளங்களில் வெளியாகி வரும் தகவல்கள் தவறானது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டது. மேலும் இதுகுறித்து யாரும் பீதி அடைய வேண்டாம். மக்களிடம் உள்ள நாணயங்களை வர்த்தக நிறுவனங்களும், வங்கிகளும் வாங்கி கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டன.

     இந்நிலையில் திருச்சி மாவட்டம், துறையூர் அருகே செயல்பட்டு வரும் பால் நிறுவனத்திடம் ஏராளமான நாணயங்கள் குவிந்தன. அந்த வகையில் கடந்த 5 மாதங்களில் ரூ.34 லட்சம் மதிப்பிலான நாணயங்கள் சேகரிக்கப்பட்டன. இதை அங்குள்ள வங்கியில் வைப்பு செய்ய நிறுவன அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

     வங்கிகள் பொதுமக்கள் அளிக்கும் நாணயங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டும் இடம் இல்லை என்ற காரணம் காட்டி அந்த வங்கி நிறுவனமானது நாணயங்களை வாங்க மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து பால் நிறுவனம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையை நாடியது.

     இந்த வழக்கை விசாரித்த நீதிஅரசர்கள், பால் நிறுவனம் அளிக்கும் நாணயங்களை வாங்கிக் கொள்ளுமாறு உத்தரவிட்டனர். எனினும், ரூ.1 லட்சம் மதிப்பிலான நாணயங்களை மட்டுமே வங்கி நிர்வாகம் பெற்று கொண்டது. மீதமுள்ள ரூ.33 லட்சத்தை பெற மறுத்து விட்டது. இதனால் அந்த பால் நிறுவனத்தினர் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர்

     மோடியின் ரூபாய்தாள் செல்லாது அறிவிப்பால் வந்ததுதானே இந்தக் குளறுபடி. மோடிதான் இதற்கு உரிய வழி சொல்ல வேண்டும். பாவம்! நீதிமன்றங்களும், வங்கிகளும் என்ன செய்ய முடியும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.