Show all

மலேசிய மருது எப்போதிருந்தே இருக்கிறது. மலேசிய மணல் தற்போதுதான் வருகிறது. காலதாமதமான முடிவு

08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம்மிடம் மிகத்தட்டுப் பாடான பொருளை இறக்குமதி செய்வதில் பிழையேதும் இல்லை. நம்மிடம் இல்லாத மணலுக்காக ஆற்றைக் குடைந்து குடைந்து எடுத்து, தற்போது மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த உழவுக்குத் துணையான, கரிகால் சோழன் காலத்து காவிரியை இழந்து விட்டோம். 

மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் தனியார் நிறுவனம் ஒன்று மணலை இறக்குமதி செய்திருந்தது. அதை வழக்கு போட்டு முடக்கி விட்டு, 

தற்போது ஞானேதயம் வந்து, தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் விடப்பட்டு பரிசீலனை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இதற்கிடையே மலேசியாவின் பஹாய் மாநிலம் பீகான் துறைமுகத்தில் இருந்து 56,750 மெட்ரிக் டன் ஆற்று மணல் கப்பல் மூலம் எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்துக்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டது. கப்பலில் இருந்து மணல் இறக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இயங்கலையில் மணல் வேண்டி பதிவு செய்தால் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக லாரிகள் மூலம் மணல் விநியோகம் செய்யப்படும். மணல் வேண்டி பதிவு செய்யும் நபர்களுக்கு சேதி மூலம் ஒருமுறைகடவுஎண் அனுப்பப்படும்.

அதை மணல் கொண்டு வருபவரிடம் சரியாக கூறினால் மட்டுமே மணல் விநியோகம் செய்யப்படும்.

இதனால் லாரிகளில் மணல் கடத்தப்படுவது தடுக்கப்படும் என்றும் கூடுதல் விலைக்கு மணல் விற்பனை செய்வது தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மணல் விற்பனையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் மணல் தட்டுப்பாடு குறையும்.

 

இந்த மணலுக்காக, வுளேயனெ இணைய தளத்திலும், கைப்பேசி செயலி மூலமாகவும் இயங்கலையில் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

துறைமுகத்தில் முதல் கட்டமாக 11 ஆயிரம் யூனிட் மட்டுமே வழங்கப்பட உள்ளது. முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இணையதளத்தில் பதிவு செய்யாத வாகனங்களுக்கும் மணல் வழங்கப்படும்.

உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவுப்படி ஒரு அலகு (சுமார் 4.5 டன்) மணல் விலை ரூ.9,990 ஆகும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,920.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.