Show all

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசின் இழிவான அரசியல்! நாற்காலிக்காக நடத்தும் நாடகம்: கமல்

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. 

இந்த வழக்கில் உச்ச அறங்கூற்றுமன்ற இறுதி தீர்ப்பில், அதில் கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை ஒதுக்கீடு செய்தது. அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வாரியம் அமைந்தால் காவிரி அணைகளை கட்டுப்படுத்தும் உரிமை கர்நாடக அரசுக்கு இருக்காது. இதனால் காவிரி மேலாண்மை வாரியத்தை எக்காரணம் கொண்டும் அமைக்கக்கூடாது என்று கர்நாடக அரசு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும் என்று நடுவண் அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. தமிழக அரசியல் கட்சிகளும் இதை வற்புறுத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசும் சட்டமன்றத்தில் இதுகுறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்றத்தில் தமிழக அரசியல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் போராடி வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கி வருகிறது. 

இந்நிலையில் உச்ச அறங்கூற்றுமன்ற கால அவகாசத்தில் இன்னும் ஒரேயொரு கிழமைதான் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வாய்ப்பு இல்லை என்று நடுவண் நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்து உள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை கட்டாயம் அமைக்க வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் இழிவான அரசியல் செய்யப்படுகிறது என  “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெளிவான விமர்சனம் செய்து உள்ளார். 

இது தொடர்பாக அவர் கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், “பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா? இது இயலாமை அல்ல; இழிவான அரசியல். கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்,” என கூறிஉள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,734.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.