Show all

தமிழக உழவர்கள் சட்டப்போராட்டம்! காவிரி கழிமுகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு நடுவண் பாஜக அரசின் ஆதிக்க அனுமதிக்கு தடைகோரி,

காவிரி கழிமுகப் பகுதியில், ஹைட்ரோ கார்பன் எனப்படும், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி திட்டங்களுக்கு, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து, காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்துள்ளனர் தமிழக உழவர் பெருமக்கள்.

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக உழவர்பெருமக்கள்- காவிரி கழிமுகப் பகுதியில், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு நடுவண் பாஜக அரசு அளித்துள்ள அனுமதிக்கு தடை விதிக்கக் கோரி, காவிரி விவசாயிகள் சங்கம் சார்பாக உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்துள்ளனர்.

அந்த மனுவில் தமிழக உழவர்பெருமக்கள் தெரிவித்திருப்பதாவது:- நடுவண் சுற்றுச் சூழல் அமைச்சகம், நாளது 02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121ல் (16.01.2020) காவிரி கழிமுகப் பகுதியில், அனைத்து வகை எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தவகையில், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 341க்கும் மேற்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான ஆய்வுக் கிணறுகள் தோண்ட ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

இத்திட்டங்களைத் தொடங்கும் முன், பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும்; மாநில அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், இந்த நடைமுறை எதையும் பின்பற்றாமல், நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. இது சட்ட விரோதமானது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது.

இது, எங்கள் பகுதியில் வாழும் ஏராளமான உழவர்கள் மற்றும் இதர பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும், சுதந்திரத்தையும் பாதிக்கும். எனவே, ஒன்றியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.