Show all

தொடரும் தமிழர் கெத்துக்களில் மேலும் ஒரு புதிய பதிவு! அமெரிக்க கொரோனா கட்டுப்பாட்டு குழுவில் ஒரு தமிழ்ப்பெண்

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குழு ஒன்றினை அமைத்துள்ளார். அதில் இடம் பெற்றுள்ளவரில் ஒருவர் தமிழ்ப்பெண் என்பது தொடரும் தமிழர் கெத்துக்களில் மேலும் ஒரு புதிய பதிவு என்று உலகத் தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

26,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குழு ஒன்றினை அமைத்துள்ளார்.

இந்தக் குழுவில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்திற்குச் சொந்தமான செலின் ராணி கவுண்டர் என்கிற தமிழ் பெண் மருத்துவர் இடம் பெற்றுள்ளார்.

பைடனால் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு, கொரொனா நுண்நச்சுத் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கவும், இன வேறுபாடுகளைக் களையவும், பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீண்டும் திறக்கவும் பணியாற்றும் என தெரிவித்துள்ளார்.

இந்தக்குழுவில் தமிழ் பெண் மருத்துவர் ஒருவர் இடம் பெற்றிருப்பது இந்திய ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

43 அகவையுள்ள செலின் ராணி கவுண்டரின் தந்தை ராஜ் நடராஜன் கவுண்டர் ஈரோடு மாவட்டம் பெருமாள்பாளையத்தை சேர்ந்தவர். இவரது தாய் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஆவார். ராஜ் கவுண்டர் 60 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து போயிங் நிறுவனத்தில் பணியாற்றினார்.

நலங்கு மற்றும் தொற்று நோய் கட்டுப்பாட்டில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் செலின். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியல் படித்து முடித்து, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பர்க் பொது நலங்குக் கல்லூரியில் தொற்றுநோய் துறையில் இயல்அறிவு முதுவர் பட்டம் பெற்றுள்ளார்.

22ஆண்டுகளுக்கு முன்பு 8ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலக் கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, மால்வாய், எத்தியோப்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் காசநோய், ஹெச்.ஐ.வி. தொடர்பான மருத்துவ சேவை, ஆராய்ச்சிகளை செலின் ராணி மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க காசநோய் தடுப்பு பிரிவில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக செலின் ராணி தற்போது பணியாற்றி வருகிறார்.

அமெரிக்கரைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்தாலும், செலின் கவுண்டர் அடிக்கடி தமிழகத்திற்கு வந்து போய்க் கொண்டிருக்;கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை பெயரில், ராஜ் கவுண்டர் அறக்கட்டளை என்ற அமைப்பை செலின் தொடங்கியுள்ளார்.

தனது தந்தை படித்த மொடக்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு உதவுவதோடு, குழந்தைகள் படிப்பிற்கும் இந்த அமைப்பு உதவுகிறது. செலினின் இந்த வளர்ச்சி குறித்து மிகவும் பெருமைப்படுவதாக, பெருமாள்பாளையம் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்பதால் சத்துணவு குழந்தைகளுக்கு கிடைக்காது என்று தெரிந்து கொண்ட செலின், அவர்களது வீட்டிற்கு காய்கறிகளை அன்றாடம் வழங்குமாறு எங்களிடம் கூறினார். இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்னரே கொரோனா குறித்து எங்களுக்கு அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி, நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எங்களிடம் விளக்கினார் என்று ராஜ் கவுண்டர் அமைப்பின் செயலாளர் தேவராஜ் நல்லசிவம் தெரிவித்துள்ளார்.

செலின் ராணி கவுண்டர் ஆகிய ஒரு தமிழ்ப்பெண்ணின் வளர்ச்சிக்காகவும், அவர் தன் தந்தை மீது கொண்ட பாசத்திற்காக தமிழகத்தின் மீது கொண்டிருக்கும் அன்புக்காகவும் நாமும் பாராட்டி பெருமை கொள்வோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.