Show all

நடிகை காஜல் அகர்வால் சிறந்த முதலீட்டாளர்! கொண்டாடும் இயங்கலை விளையாட்டு நிறுவனம்

இந்தியாவின் இயங்கலை விளையாட்டுத் தொழில் மதிப்பு 375கோடி டாலர்களாக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ள இயங்கலை விளையாட்டுத் துறையில், பெருந்தொகையை நடிகை காஜல் அகர்வால் முதலீடு செய்துள்ளாராம்.

27,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் தமிழ்த் திரையுலகம் முதல் ஹிந்தி திரையுலகம் வரை கொடி கட்டி பறப்பவர்தான் நடிகை காஜல்அகர்வால். 

இரண்டு கிழமைகளுக்கு முன்பு காஜல் அகர்வால் கௌதம்கிச்லு திருமணச்செய்தி இணையத்தில் தீயாகி வந்த நிலையில், தற்போது மும்பையைச் சேர்ந்த இயங்கலை நிறுவனத்தில் காஜல்அகர்வால் முதலீடு செய்துள்ளதான செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. 

காஜல் முதலீடு செய்துள்ள நிறுவனம், இந்த நிதியாண்டு இறுதிக்குள் அதன் வருவாயை 50 கோடி ரூபாயாக அதிகரிப்பதை இலக்காக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் மேற்கண்ட இந்த முதலீட்டினை அதன் விரிவாக்க பணிக்காக பயன்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதன் தளத்தில் உள்ள விளையாட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

எண்ணிம விளையாட்டுத் துறை அதி வேகமாக வளர்ந்து வருகின்றது. ஆக இது சரியான நேரம் தான். நான் எப்போதும் ஆர்வமுள்ள விளையாட்டாளர். மேலும் இந்தியாவில் பெண்கள் சிறந்த விளையாட்டாளர்களாக மாற இது வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன் என்று காஜல் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். 

கற்பனை மட்டைப்பந்தாட்டம், எண்கள் மிடுக்கு விளையாட்டு, வினாடிவினா, சீட்டாட்டம், சொற்கள் விளையாட்டு உள்ளிட்ட பல விளையாட்டுக்களைக் கொண்டுள்ள ஒரு தளமாகும் காஜல் முதலீடு செய்துள்ள ‘ஒக்கி கேமிங்’ நிறுவனம். அந்த நிறுவனத்தின் இந்தச் செயலியை கூகுள் விளையாட்டுக் கடையில் அடுத்த மாதத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய முடியும் என்று அந்த விளையாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.   

காஜலின் ஆர்வம், விளையாட்டுத் துறையில் காஜல் அகர்வாலின் தனிப்பட்ட ஆர்வம், பரந்த அளவிலான அணுகல் மற்றும் முறையீடு ஆகியவை இந்த நிறுவனத்தினை மேம்படுத்த உதவும் என்று ‘ஒக்கி கேமிங்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிடின் மசந்த் தெரிவித்துள்ளார். மேலும் காஜல் விருப்பமான முதலீட்டாளர். எங்கள் விளையாட்டு நிறுவனத்திற்கு தனித்துவமான யோசனைகளையும் நுண்ணறிவுகளையும் கொண்டு வருகிறார் என்றும் ஜிடின் கூறியுள்ளார். 

எங்களது விளையாட்டுத் தளத்தில் எந்த ஒரு நேரத்திலும் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை வைத்திருக்க விரும்புகிறோம். மேலும் சூதாட்ட விளையாட்டுகளில் இருந்து நாங்கள் விலகியே இருக்கிறோம். நாங்கள் எங்களது தளத்தில் ஐந்து விளையாட்டுகளை வைத்துள்ளோம். ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய விளையாட்டை தொடங்க விரும்புகிறோம் என்றும் ஜிடின் கூறியுள்ளார். அடுத்த ஆறாவது மாதத்தில் எங்கள் செயலியின் 50 இலட்சம்; பதிவிறக்கங்கள் செய்வதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார். 

இந்திய இயங்கலை விளையாட்டு தற்போது 93 கோடி டாலர் மதிப்புடையது. மேலும் இது ஆண்டுதோறும் 41விழுக்காடு வளர்ச்சி காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் ஐந்தாண்டில் இந்தியாவின் இயங்கலை விளையாட்டுத் தொழில் மதிப்பு 375கோடி டாலர்களாக அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.