Show all

தமிழர் பெருமிதம் வள்ளல் சிவநாடார்! தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.15 கோடி நன்கொடையால் மிளிரும் மதுரை அரசு பள்ளி

தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.15 கோடி நன்கொடையால் மிளிரும் மதுரை அரசு பள்ளி. தமிழர் பெருமிதம் வள்ளல் சிவநாடார். மேலும், பள்ளியில் மாணவர்கள் கற்றுக்கொள்ளும் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அதிகரிக்க பல்வேறு பயிற்சிகள் ஹெச்.சி.எல் நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிவசுப்பிரமணியம் என்கிற சிவநாடார் தமிழகத் தொழிலதிபரும், கல்வியாளரும் ஆவார். ஹச்.சி.எல் கணினி குழுமத்தின் தலைவராகவும் நிர்வாக ஆளுநராகவும் இருக்கிறார்.

சிவநாடார் தூத்துக்குடியில் மூலைபொழி என்னும் கிராமத்தில் பிறந்தார். அமெரிக்கன் கல்லூரி மற்றும் பூசாகோ தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். ஒரு சிறிய கணினி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் 43 ஆண்டுகளுக்கு முன்பு அஜய் சவுதிரி என்பவருடன் சேர்ந்து எச்சிஎல் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று எச்சிஎல் கணினி துறையில் பிரபலமான மென்பொருள் மற்றும் கணினி நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழின் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து இடம் பெறும் ஒற்றைத் தமிழர் இவர்தான். 

சிவநாடார், தான் படித்த மதுரை இளங்கோ அரசு பள்ளிக்கு ரூ.15 கோடி நன்கொடை அளித்துள்ளார். இதனால், இளங்கோ அரசு பள்ளி புதிய கட்டடங்களுடன் மிளிர்கிறது.

மதுரை இராசாசி மருத்துவமனை அருகேயுள்ள இளங்கோ அரசு பள்ளியில்தான் 7 மற்றும் 8-ம் வகுப்பு படித்தார் இந்தியா விடுதலை அடைவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பள்ளி கட்டிடம் சரியாகப் பராமரிக்கப்படாமல் இருந்தது. பக்கத்தில் உள்ள பிள்ளைகள் மட்டுமே இங்கு சேர்ந்து படித்து வந்தனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் படித்த பள்ளிக்கு சிவநாடார் வந்திருந்தார். பள்ளியின் நிலையைக் கண்ட அவர் கலங்கிப் போனார். படித்த பள்ளிக்கு ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டுமென்று கருதிய அவர், இளங்கோ பள்ளிக்கு ரூ.15 கோடி ஒதுக்கினார். 

தொடர்ந்து, இளங்கோ பள்ளிக்கென்று புதியதாக இரு கட்டடங்கள் கட்டும் பணிகள் தொடங்கியது. அழகிய கட்டடங்கள் 24 வகுப்பறைகளுடன் எழுந்தது. மதுரைக்கு வரும்போதெல்லாம் பள்ளியில் நடைபெறும் பணிகளை சிவநாடார் பார்த்துவிட்டுச் செல்வார். 

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியார் இராசேந்திரன், பள்ளியில் மிடுக்கு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. கரும்பலகை மட்டுமே 15 அடி நீளம் கொண்டது. பள்ளிக்குள்ளேயே தண்ணீருக்காக தனி கருவி அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூரிய ஒளி மின்சாரத்தில் வகுப்பறைகள் இயங்கும். கழிவறைகள் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 100 கணினிகளுடன் ஆய்வகம், முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட நூலகம், பள்ளி வளாகத்தில் அழகிய பூங்கா ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. கூடைப்பந்து விளையாட்டில் எங்கள் பள்ளி தலைமையானது என்பதால் நவீன கூடைப்பந்து விளையாட்டு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களில் அனைத்துப் பணிகளும் முற்றிலும் முடிந்து விடும் என்று உற்சாகத்தோடு தெரிவிக்கிறார்.

பள்ளியில் மாணவர்கள் கற்றுக்கொள்ளும் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அதிகரிக்க பல்வேறு பயிற்சிகள் ஹெச்.சி.எல் நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நீருபவி திபேந்திர சிங் என்பவரை ஹெச்.சி.எல். மேலாளராக நியமித்துள்ளது. இதன் விளைவாக இளங்கோ  பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு  12-ம் வகுப்பில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் சார்பாக உதவித்தொகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வள்ளல் சிவநாடார் தமிழர் பெருமிதம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,174.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.