Show all

அறங்கூற்றுமன்றம் கைவிட்ட நிலையில், தமிழக மக்களிடம் வெற்றி தீர்ப்பை எதிர் நோக்கி இடைத்தேர்தலைச் சந்திக்க அணியமாகிறார் தினகரன்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மேல்முறையீடு செய்து, இனியும் அறங்கூற்றுமன்றத்தை நம்பி  காலதாமதத்தை ஏற்படுத்தாமல், தமிழக மக்களை நம்பி  இடைத்தேர்தல் மூலம் இந்த ஆட்சிக்கு ஆறுமாதத்தில் முடிவு கட்டிவிடலாம் என்ற ஆலோசனையில் தினகரன் இருக்கிறார். 

சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் வழக்கில் வெளியான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை என்றால் தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஆறு மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். அந்தத் தேர்தலில், தமிழக மக்களின் வெற்றித் தீர்ப்பைப் பெற்று பலத்தை நிரூபிக்கலாம் என்று தினகரனிடம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் பலர் ஆலோசனை தெரிவித்துள்ளனர். அதை தினகரனும் ஆமோதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

20 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடத்தப்படும் இடைத்தேர்தல் திமுகவுக்கும் தினகரனுக்குமான பலப்பரீட்சையாகவே இருக்கும். எடப்பாடி- பன்னீர் அணியினரால் தமிழக மக்கள் அடைந்த, தூத்துக்குடி உள்ளிட்ட சோக வடுக்கள் இன்னும் இரணமாகவே உள்ள நிலையில், அதிமுக இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வைப்புத் தொகை இழப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தினகரனின் பதினெட்டு சட்ட மன்ற வேட்பாளராக நிற்கக் கூடியவர்கள் அந்தந்த தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களே. அது மட்டுமல்லாமல், பாஜக மற்றும் எடப்பாடி- பன்னீர் சூதால் வஞ்சிக்கப் பட்டவர்கள். 

தீர்ப்பு வெளியான பிறகு தினகரன், தனக்கு நெருக்கமானவர்களிடம் நடத்திய ஆலோசனையில், மேல்முறையீடு வேண்டாம், இடைத்தேர்தல் நடக்கட்டும் என்று சொல்லியிருக்கிறார். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அ.தி.மு.க.வினருக்கு கடும் சவாலாக இருக்கும். எனவே, மேல்முறையீடு செய்து காலதாமதப்படுத்தாமல் ஆறு மாதத்துக்குள் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டிவிடலாம் என்று தினகரன் தமிழக மக்களை நம்பியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,951.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.