Show all

பாஜக பிரமுகர் துணிக்கடையில் ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்

சென்னையில் பாஜக பிரமுகர் தண்டபாணி என்பவருக்குச் சொந்தமான துணிக்கடையில் ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு வருமான வரித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. பணத்தை மாற்றிய அரசியல் பிரமுகர்கள் யார் யார் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

     கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே பாஜக பிரமுகர் தண்டபாணி என்பவருக்கு சொந்தமான துணிக்கடை உள்ளது. இங்கு காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கான சீருடைகள் தயாரித்து கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் இந்த கடையில் ரூ.45 கோடி மதிப்புடைய பழைய ரூபாய் தாள்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு கமுக்கத் தகவல் கிடைத்தது.

     அதன் பேரில் அந்தக் கடையில் சோதனை நடத்தியபோது கட்டுகட்டாக கிட்டத்தட்ட ரூ.45 கோடி பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

     தற்போது அந்தக் கடையின் உரிமையாளரும், பாஜக பிரமுகருமான தண்டபாணியிடம் காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் யாரிடமிருந்து பணத்தை வாங்கினார், சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்வதற்காக பணத்தை மாற்றிக் கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்தாரா என விசாரணை நடைபெற்று வருகிறது.

     கடந்த நவம்பர் மாதம் 8ஆம் நாளன்று பழைய 1000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு ஏராளமான பொதுமக்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து புதிய ரூபாய் தாள்களை மாற்றினர்.

     தலையாய அரசியல் பிரமுகர்கள் தங்களிடம் இருந்த கறுப்பு பணத்தை கழிவு அடிப்படையில் புதியதாக மாற்றிக்கொண்டனர். சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்ததாக ஏற்கனவே பல வங்கி அதிகாரிகள், பல தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

     இந்த நிலையில் பாஜக பிரமுகர் தண்டபாணி என்பவருக்குச் சொந்தமான துணிக்கடையில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் தாள்கள் சிக்கியுள்ளது. இந்த வழக்கு வருமான வரித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் வருமான வரித்துறையினர் விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர்.

     தண்டபாணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கடைகளில் வேறு எதுவும் பணம் பதுக்கப்பட்டுள்ளதா? அவரிடம் கழிவு அடிப்படையில் பணத்தை மாற்றிய அரசியல்வாதிகள் யார் யார் என்றும் விசாரணை நடைபெற உள்ளது. வருமான வரித்துறையினரின் விசாரணைக்குப் பிறகே கழிவு அடிப்படையில் பணத்தை மாற்றிய அரசியல் பிரமுகர்கள் யார் என்ற தகவல் தெரியவரும். பழைய ரூபாய் தாள்கள் அதிக அளவில் கிடைக்கும் பட்சத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்த வழக்கில் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.