Show all

தமிழ்நாட்டில் 1ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்! 19,தை (பிப்ரவரி 1) முதல்

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் 19,தை (பிப்ரவரி 1) முதல் 1ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

15,தை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் 19,தை (பிப்ரவரி 1) முதல் முதல் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பள்ளிகளுக்கு முதன்மையான உத்தரவு ஒன்று பள்ளிக் கல்வித்துறை மூலம் தரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது. ஞாயிறு ஊரடங்கு இந்தக் கிழமையோடு முடிவிற்கு வருகிறது. வழிபாட்டு தலங்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின் கொண்டு வரப்பட்ட தளர்வுகள் காரணமாக இயங்கலை வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்ட போதும், இரண்டாம் அலை காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. 

இந்த நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு பள்ளிகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த போது திடீரென பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. ஓமிக்ரான் நோயாளர் அதிகரித்து வந்த காரணத்தால் பள்ளிகள் 18,தை (ஜனவரி 31) வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் திருப்புதல் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் 19,தை (பிப்ரவரி 1) முதல் 1ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று பள்ளிக்கல்வித்துறை மூலம் வெளியிடப்பட்டது. மாணவர்கள் அனைவரும் நேரடியாக பள்ளிகளுக்கு வந்து படிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு, தமிழ்நாட்டில் இருக்கும் பள்ளிகள் தூய்மைப் படுத்தப்பட வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பல மாதங்களாக வகுப்பறைகள் பயன்பாட்டில் இல்லை. இதனால் உடனடியாக வகுப்புகளை தூய்மைப் படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

4 நாட்களில் பள்ளிகளை தயார் படுத்த வேண்டும். வகுப்பறைகளை தண்ணீர் ஊற்றி கழுவிவிட வேண்டும். மேலும் நச்சு நுண்ணுயிர்க் கொல்லிகளைத் தெளித்து வகுப்பறைகளை கழுவி விட வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆசிரியர்கள் வெளியூர்களில் இருந்து உடனே தங்கள் பள்ளிகள் உள்ள ஊர்களுக்கு திரும்பி செல்ல வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,142.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.