Show all

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி! வருத்த அதிர்ச்சியில் அமமுகவினர்

ஐந்து நாட்களில் விடுதலையாகவுள்ள சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சசிகலாவிற்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

08,தை,தமிழ்த்தொடராண்டு-5122: அறுபத்தி மூன்று அகவையாகும், சசிகலாவுக்கு சர்க்கரை, உயர் குருதி அழுத்தம், உள்ளிட்ட பல்வேறு நலக்கோளாறுகள் இருக்கின்றன. இதற்காக அவர் வழக்கமாக சாப்பிடும் மருந்துகளை உட்கொண்டு வந்த நேரத்தில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெங்களூர் பௌரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வகையில் போதிய வசதிகள் இல்லாததால் இன்று பிற்பகல் விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சசிகலா. அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நுரையீரல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தொற்றானது மேலும், பரவாத வகையில் தீவிர சிகிச்சை பிரிவிலேயே அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் தொடரும் என விக்டோரியா மருத்துவமனை தெரிவித்திருந்தது. மேலும், சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் அறிவித்திருந்தது.

இதேபோல் சசிகலாவுக்கு சர்க்கரை அளவு மட்டும் சற்று அதிகம் இருப்பதாகவும் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே சசிகலாவுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி என்ற செய்தி வெளியாகியுள்ளது. 
இன்னும் 5 நாட்களில் விடுதலையாகவுள்ள நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு அமமுகவினரை கலங்க வைத்துள்ளது. சசிகலாவின் உடலநலத்திற்காக அவர்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.