Show all

விளையாட்டு வீரர் நடராஜனுக்குச் சொந்த ஊரில் வரவேற்பு கொண்டாட்டம்!

சின்னப்பம்பட்டி பிரிவு சாலையில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள அவரது வீட்டுக்கு அவரை பொதுமக்கள் மற்றும் துடுப்பாட்டக் கொண்டாடிகள் குதிரைகள் பூட்டிய வண்டியில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது, நடராஜன் தேசிய கொடியை ஏந்தி வரவேற்பை ஏற்றார்.

08,தை,தமிழ்த்தொடராண்டு-5122: விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களையும், அனுபவமற்ற பந்து வீச்சையும் வைத்துக் கொண்டு ரகானே தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவில் சாதித்து காட்டியது. சாதனை படைத்த இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் நேற்று நாடு திரும்பினார்கள்.

ஆஸ்திரேலிய பயணத்தில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன், அஸ்வின், வாசிங்டன் சுந்தர் ஆகிய 3 பேர் இடம் பெற்றிருந்தனர். வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது அறிமுக பன்னாட்டுப் போட்டியில் சாதித்தார். 29 அகவையினரான அவர் பெங்களூரில் இருந்து தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு வந்து சேர்ந்தார்.

தாரமங்கலத்தை அடுத்த சின்னப்பம்பட்டியைச் சேர்ந்தவர் துடுப்பாட்ட வீரர் நடராஜன். இவர் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டி, டி20, சோதனைப் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்றார். இவரது சிறப்பான பந்து வீச்சு மூலம் பன்னாட்டு அளவில் கவனத்தை ஈர்த்தார். இவரது பந்து வீச்சு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.

சின்னப்பம்பட்டி பிரிவு சாலையில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள அவரது வீட்டுக்கு அவரை பொதுமக்கள் மற்றும் துடுப்பாட்டக் கொண்டாடிகள் குதிரைகள் பூட்டிய வண்டியில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது, நடராஜன் தேசிய கொடியை ஏந்தி வரவேற்பை ஏற்றார்.

மேலும் வழிநெடுகிலும் சாலையின் இருபுறம் நின்ற பொதுமக்கள் மலர் தூவி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அவருக்கு பாராட்டு தெரிவிக்க சின்னப்பம்பட்டியில் அலங்கார மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

கரோனா தடுப்பு விதிமுறை காரணமாக பாராட்டு விழாவுக்கு காவல்துறையினர் அனுமதியளிக்கவில்லை. மேலும், அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்துள்ளதால், 14 நாட்கள் தனிமைப்படுத்த நலங்குத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், நடராஜனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழா மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் நடராஜன் பங்கேற்கவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.