Show all

பொதுமக்கள் பாராட்டு! அரசு பால்வாடி பள்ளியில் தனது மகளை சேர்த்த விருதுநகர் ஆட்சியர்

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தனது மகளை அரசு பால்வாடி மையத்தில் சேர்த்துள்ளார். அன்றாடம் பணிக்கு கிளம்பும் முன் தானே மகளை விட்டுச் செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

வசதி இருந்தாலும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சைபெறுவேன் என மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர் குமரி அனந்தன் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அரசுப் பள்ளிகள் மோசம் என்ற நிலையை மறுத்து தனது பிள்ளைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்தவர் ஆட்சியர் சகாயம். இதே போல் சில ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர்.

தற்போது அரசு அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாக தனது மகளை பால்வாடி பள்ளியில் சேர்த்துள்ளார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம்.

அரசு பால்வாடியில் சாதாரண ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். வசதி படைத்தவர்கள் அதற்கென இருக்கும் மழலையர் பள்ளியில் சேர்ப்பார்கள். தற்போது நகரங்களில் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளையும் மழலையர் பள்ளியில் சேர்க்கும் நிலையும் உருவாகி வருகிறது.

அரசு சார்பில் ஏழை மக்கள் கல்வி பயில அவர்கள் வீட்டுப் பிள்ளைகளை பராமரிக்க பால்வாடி மையங்கள் உள்ளன. இங்கு குழந்தைகளை பராமரிக்க இரண்டு பெண்கள் இருப்பார்கள் பயிற்சிகளை சொல்லித்தரவும், சமையல் செய்யவும் இவர்களுக்கு பணி வழங்கப்பட்டிருக்கும்.

பால்வாடி மையத்தை நடுத்தர வர்க்கத்தினரே புறக்கணித்து வரும் நிலையில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆட்சியர் தனது மகளை சேர்த்தது வரவேற்கத்தக்கது என்று ஊழியர்களும், பொதுமக்களும் கூறியுள்ளனர்.

தனது குழந்தையை அரசு பால்வாடியில் சேர்த்ததன் மூலம் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் அதே வேலையில் இது போன்ற அரசின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதன் மூலம் பால்வாடி பணிகளும் சிறப்பாக அமையும் என்பது மிக மிக முதன்மையானது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,702

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.