Show all

பொதுமக்கள் மூச்சுதிணறல்! காரைக்குடி அருகே வேதியியல் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததால்

22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காரைக்குடி அருகே வேதியியல் தொழிற்சாலை கொதிகலன் திடீரென்று வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடி அருகே கோவிலூரில் தனியார் வேதியியல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையிலிருந்து நச்சுத்தன்மை வாய்ந்த வாயு காற்றில் பரவுவதால் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு ஆலையில் உள்ள வேதியியல் துகள் சேமித்து வைக்கப்படும் கொள்கலன் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. பயங்கர சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

கொதிகலன் வெடித்ததால் ஆலையிலிருந்து வேதி வாயு வெளியேறியுள்ளது. இதனால் ஒரு பெண் உட்பட ஐந்து பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவிலூர் பகுதி மக்கள் வேதியியல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய வேதி துகள் காற்றில் கலந்து நச்சுத்தன்மை ஏற்படுத்தியதாக புகார் கூறி ஆலையை முற்றுகையிட்டனர். பின்னர் கோவிலூர் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் வேதியியல் தொழிற்சாலைக்குள் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து கொதிகலன் வெடித்த ஒருசில நிமிடங்களில் சரிசெய்யப்பட்டது என்றும், மேலும் வேதி வாயு காற்றில் கலக்காமல் இருக்கும்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆலை நிர்வாவகத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். எனினும் வேதியியல் தொழிற்சாலையை நிரந்தராக மூட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொழிற்சாலைகள் தேவைதான்! பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத தொழிற்சாலைகள் தேவையேயில்லை என்கின்றனர் பொதுமக்கள்; நியாயம்தானே!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,872.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.