Show all

கூட்டல் 2 எனப்படும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு! தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது

தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கும் கூட்டல் 2 எனப்படும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மூன்று கிழமைகள் வரை நடைபெறுகின்றன.

22,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டில் கூட்டல் 2 எனப்படும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.

தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கும் கூட்டல் 2 எனப்படும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மூன்று கிழமைகள் வரை நடைபெறுகின்றன. இந்தத் தேர்வுகளை 8,37,317 பேர் எழுதுகின்றனர். இவர்களில் 3,98,321 பேர் மாணவர்கள், 4,68,587 பேர் மாணவிகள் ஆவர். 

கூட்டல் 2 எனப்படும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான தேர்வுக்காக தமிழ்நாடு முழுவதும் 3,119 மையங்கள் தயாராக உள்ளன. தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில், தேர்வறைகள் தொற்றுக் கொல்லிகள் தெளித்து தூய்மைப்படுத்தி, தேர்வு எண்கள் ஒட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

காலை பத்து மணிக்குத் தொடங்கும் தேர்வுகள், மதியம் ஒன்றே கால் மணிக்கு நிறைவு பெறும். முதல் பத்து மணித்துளிகள் வினாத்தாளை படித்துப் பார்க்கவும், அடுத்த 5 மணித்துளிகள் தேர்வர்கள் குறித்த விவரங்களை சரிபார்க்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக் மின்ஆக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் படியாடலைத் (காப்பியடித்தல்) தடுக்க ஆயிரம் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு செல்பேசி எடுத்து செல்ல அனைவருக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வில் மாணவர் படியாடியது உறுதி செய்யப்பட்டால், அவரது விடைத்தாள் திருத்தப்படாது என்றும், ஓராண்டுக்கு தேர்வு எழுத தடைவிதிக்கப்படும் எனவும் தேர்வுகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல முறைகேடுகளுக்கு துணை போகும் பள்ளிகளின் அங்கீகாரத்தை களைவு செய்யவும் பரிந்துரைக்கப்படும் என தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,239.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.