Show all

இரு குழந்தைகளுடன் பெற்றோர் தீக்குளிப்புக்குக் காரணமான கந்துவட்டி

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், காசிதர்மம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த பலவேசம் மகன் இசக்கிமுத்து அகவை 28, கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி அகவை 26. இவர்களது மகள்கள் மதி சாருண்யா அகவை 4, அட்சய பரணியா அகவை 2.

இசக்கிமுத்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் வட்டிக்கு கடனாக ரூ. 1.60 லட்சம் பெற்றிருந்தாராம். அதற்கு இதுவரை ரூ. 2.34 லட்சம் வட்டியோடு சேர்த்து திரும்பச் செலுத்திய நிலையில், மேலும் அசல் கேட்டு இசக்கிமுத்துவுக்கு அப்பெண் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இசக்கிமுத்து அளித்த புகாரில் அச்சன்புதூர் காவல்துறை பணம் கொடுத்தவருக்கு ஆதரவாக செயல்படுவதாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இசக்கிமுத்து பலமுறை மனு அளித்திருந்தாராம்.

இந்நிலையில், கந்துவட்டி நெருக்கடி அதிகரித்ததால் இசக்கிமுத்து, கடந்த சில மாதங்களாக குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை 11 மணிக்கு குடும்பத்துடன் இசக்கிமுத்து வந்தார். அங்கு திடீரென மனைவி, 2 குழந்தைகள் மீது மண்ணெண்ணெயை ஊற்றிய இசக்கிமுத்து தன் மீதும் ஊற்றிக்கொண்டு தீவைத்துக் கொண்டார்.

குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற வளர்ச்சி மன்ற கூட்டரங்கு முன்பு நிகழ்ந்த இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கொளுத்தும் வெயிலில் தீயின் வெப்பம் தாங்க முடியாமல் 2 குழந்தைகளும் கதறின. இதற்குள் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது.

ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினரும் பொதுமக்களும் ஓடிச் சென்று, தண்ணீர், மணலைக் கொண்டு தீயை அணைக்க முயன்றனர். சிறிது நேரத்தில் தீயை அணைத்து 4 பேரையும் காவல்துறை ஜீப்பில் ஏற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தகவலறிந்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அரசு மருத்துவமனைக்குச் சென்று தீக்காயம் அடைந்தவர்களைப் பார்த்தார்.

மருத்துவர்களிடம் தீவிர சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் இசக்கிமுத்துவிடம் காவல்துறை முன்னிலையில் திருநெல்வேலி குற்றவியல் 3ஆவது நடுவர் மன்ற அறங்கூற்றுவர் கார்த்திகேயன் வாக்குமூலம் பெற்றார். இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி, மதி சாருண்யா, அட்சய பரணியா ஆகியோர் இறந்தனர். இசக்கிமுத்துவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த தீக்குளிப்பு சம்பவம் குறித்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டறிந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தனிநபர் ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி, திரும்ப செலுத்தாத பிரச்னையில் இசக்கிமுத்து, மனைவி, குழந்தைகளுடன் தீக்குளித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காசிதர்மம் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தத் தகவலின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், பாதுகாப்பு அதிகரிக்கப்படும். கந்துவட்டி போன்ற பிரச்னைகள் எழும்போது, பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் உதவி தொலைபேசி திட்டம் செயல்படுத்தப்படும்.

வருவாய்த் துறை, காவல்துறையினர் அடங்கிய குழு அமைக்கப்படும். கந்துவட்டி தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றார் அவர்.

அதீத வட்டி வசூல் தடைச் சட்டத்தின்கீழ், கந்து வட்டி வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

கடந்த தமிழ்தொடர்ஆண்டு-5109 (2003) அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால், தமிழ்நாடு அதீத வட்டி வசூல் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. காவிரி காப்பு குழுத் தலைவர் பி.ஆர்.குப்புசாமி உள்ளிட்டோர் கந்து வட்டி தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அதீத வட்டி வசூல் தடைச் சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார்.

கடன் கொடுப்பவர்கள், கடனைத் திரும்ப வசூலிக்க ஆட்களைக் கொண்டு அப்பாவிகள் மீது நடத்தும் கடுமையான நடவடிக்கையால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபோன்ற நிலையைத் தடுக்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அப்போது அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆண்டுக்கு 18 விழுக்காட்டிற்கு மேல் கந்துவட்டி வசூலிப்பவர்களுக்கு, அதிகபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ 30,000 அபராதம் விதிக்க இந்தச் சட்டத்தில் இடமுள்ளது.

இந்தச் சட்டத்தின்கீழ், மணிநேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி, தண்டல் போன்ற ஆடம்பரமான பெயர்களில் தினமும் வட்டி மற்றும் அபராத வட்டி வசூலிக்கும் வட்டிக்காரர்களுக்கு எதிரான புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இசக்கிமுத்து குடும்பத்தினரை தற்கொலைக்குத் தூண்டியதாக, அவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்த காசிதர்மம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முத்துலட்சுமி, அவரது கணவர் தளவாய்ராஜ், மாமனார் காளி ஆகியோர் மீது பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

திமுக செயல் தலைவர். மு.க. ஸ்டாலின்:

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்திருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் கொடுமைக்கு காரணமான கந்துவட்டி நபர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மீது அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர். வைகோ:

கந்து வட்டிக்காரர் மீதும், நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறை மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு, உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மேலும், இந்தக் கொடுமையை தடுக்க தவறிய நெல்லை மாவட்ட ஆட்சியர் மீதும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாமக இளைஞரணித் தலைவர். அன்புமணி ராமதாஸ்:

ஏழை குடும்பங்களை நாசமாக்கும் கந்துவட்டிக் கொடுமை இனியும் நீடிக்கக் கூடாது. 2003 -ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை அரசு முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். இசக்கி முத்து குடும்பத்தின் தீக்குளிப்புக்குக் காரணமான கந்துவட்டிக்காரர், காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன்:

தற்கொலைச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய முறையில் புகார் செய்த பிறகும் நடவடிக்கை எடுக்காத அச்சன்புதூர் காவல் நிலைய அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்து வட்டி ஒழிப்புச் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

-கந்து வட்டி கொடுமைக்கு முழுக்க முழுக்க அரசின் வங்கியியல் மற்றும் பொருளாதார நடைமுறைக் கோட்பாடுகள்தாம் காரணம்.

தனிமனிதன் தொழில் செய்துதான் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவது, பிள்ளைகளுக்குத் திருமணம், பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான கல்வி, அரசு நடத்தும் சாரயக் கடைகள் மூலம் தம் மக்கள் சீரழிந்து விடாமல் காப்பதற்கான பொறுப்;பு, அனைத்திற்கும் மேலாக அரசுக்கு வரி என்று அனைத்தையும் நிருவகிக்கின்றான்.

ஆனால் அரசோ- தொழிலும் செய்து, வரியும் வாங்கி, மக்களைச் சீரழிக்கிற சாராயக் கடையும் நடத்தியும்,

அரசின் அனைத்து ஆதாயத்திற்குமான மக்கள்- தொழிலில் நசிந்து போகிற போது-

அரசிற்கு எந்;த விதமான பொறுப்பும் இல்லாத வங்கியியல் மற்றும் பொருளாதார நடைமுறைகளையே அரசு கொண்டுள்ளது.

எளிய மக்களுக்கான கடனுதவிப் பொறுப்பை கந்து வட்டிக்காரர்களே எடுத்துக் கொண்டுள்ள நிலையில்,

கடன் பெறுகிற மக்கள்- கந்து வட்டிக்காரரின் எந்தக் கடுமையான நிபந்தனைகளையும் ஆவணப்படுத்தாமல் அவர்களை முழுமையாக பாதுகாக்கவே செய்கிறார்கள். சட்டப் படி கந்து வட்டிக்காரர்களை தண்டிக்க முடியாமல் பாதுகாப்பு அரணாக இருக்கிறார்கள்.

கடன் கொள்கையில் வட்டியை அடைத்து விட்டுதான் கடனை அடைக்க முடியும்.

‘வட்டிக்குக் கடன் வாங்கி அட்டிகை வாங்கினேன்;

அட்டிகையை விற்று வட்டி கட்டினேன்;

அசலும் பாக்கிவட்டியும் ஏறிக்கொண்டேதான்; இருக்கிறது’

என்கிற நிலைதான்.

யார் செத்தாலும், எத்தனை விடுமுறை வந்தாலும், பூகம்பமே வந்தாலும், ஆழிப்பேரலையே வந்தாலும், நாள் வேகமாக ஓடினாலும் வட்டி பொறுமையாக வளர்வதற்கு எதுவும் பாதிப்பு இல்லை.

வங்கி வட்டிக்கும் இந்த கதைதான்; கந்து வட்டியின் நிலைமை என்னாகும்?

மிகக் கடுமையாக பாதிக்கிற கடன்காரன் மட்டுந்தான் மனுகொடுப்பான்; போராடுவான்; ஆனால் அவனிடமும் ஆவணம் இருக்காது.

ஆக தண்டனை மூலம் கந்து வட்டிக்காரர்கள் பாதிக்காமல் கடனாளிகளே அரணாக நிற்பார்கள். அரசுக்கான பொறுப்பை எடுத்துக்கொண்டு இயங்குகிற மக்களின் நலிவின் போது கடனுக்கான பொறுப்பை அரசு எடுத்துக் கொண்டால் அன்றி இதற்கு நிரந்தரத் தீர்வு இல்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.