Show all

பாராட்டலாமா! தண்டிக்கலாமா? காவிரியின் குறுக்கே ராட்சத குழாய்களை வைத்து தற்காலிக தரைபாலத்தை அமைத்த மூவர்.

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொடுமுடி அருகே கருவேலம்பாளையம் என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தை இணைக்கும் வகையில் பரிசல் இயக்க ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதில் தண்ணீரின் வரத்து குறைவாக இருப்பதை பயன்படுத்தி காவிரியின் குறுக்கே ராட்சத குழாய்களை வைத்து தற்காலிக தரைபாலத்தை கார்த்திகேயன், கருப்பண்ணன் மற்றும் கபூர்கான் ஆகியோர் இணைந்து அமைத்துள்ளனர்.

ஆனால் இதை பொதுப் பணியாக செய்யாமல், நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 ரூபாயும் இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் இந்தப் பாலத்தில் பயணிக்க கட்டணம் நிர்ணயம் செய்து வசூலித்துள்ளனர்.

இந்த பகுதியில் ஈரோடு நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் காவிரி பாலம் இல்லாததால் அதிக அளவிலானோர் இந்த வழியில் பயணம் செய்திருக்கிறார்கள். 

இது குறித்த தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு வந்த கொடுமுடி வட்டாச்சியர் தலைமையிலான வருவாய் துறையினர் தற்காலிக பாலத்தை நேற்று முன்தினம் அகற்றினர். 

ஆனால் மீண்டும் அதேபகுதியில் பாலம் அமைத்து வசூலை தொடங்கியுள்ளனர் மேற்படி நபர்கள். இதுகுறித்த தகவலறிந்த வருவாய்துறை, பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் இன்று பாலத்தை முழுமையாக அகற்றியதுடன், சாலை அமைக்க பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.

மேலும் கொடுமுடி காவிரி ஆற்றில் குறுக்கே மண் பாதை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கார்த்திகேயன், கருப்பண்ணன் மற்றும் கபூர்கான் ஆகியோரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தடுப்பணையாகவும், பாலமாகவும்  கட்டி பயன் படுத்த ஏற்ற இடம் அந்த இடம் என்று அறிந்து செயல்படுத்திய,  நபர்களின் ஆர்வத்;தைப் பாராட்டி ஏதாவது பரிசளித்தும், ஆர்வக் கோளாறை மன்னித்தும், அந்தப் பகுதியில் நிரந்தரப் பாலம் கட்டி, பொது மக்களுக்கு கட்டணம் பெற்றோ பெறாமலோ பாலம் என்ற வகையில் பயணிக்கவும்;, தடுப்பணை என்ற வகையில் நிலத்தடி நீர் சேமிப்புக்கும் வசதி செய்து தரலாமே அரசு! 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,814. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.