Show all

விபத்து ஏற்பட்டால் காப்பாற்றப் படலாம் என்கிற தலைக்கவசம் அணியாமைக்கு, வழங்கப்பட்டன! மரணங்கள் தண்டனை

24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. தனியார் நிதி நிறுவன ஊழியர். இவரது மனைவி உஷா அகவை 36 ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். நீண்ட நாட்களாக குழந்தை இல்லை.

மூன்று மாதங்களுக்கு முன் உஷா கர்ப்பம் அடைந்தார். நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய ராஜா மனைவியை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

இரவு 7 மணியளவில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவாக்குடி சுங்கச்சாவடி அருகே இருவரும் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், ராஜாவின் வாகனத்தை மறித்து ஏன் தலைக்கவசம் அணியவில்லை என்று கேட்டார்.

மருத்துவமனைக்குச் செல்லும் அவசரத்தில் தலைக்கவசம் அணியவில்லை என்று கூறிவிட்டு காமராஜ் அங்கிருந்து புறப்பட்டார்.

ஆனால் அவரை மற்றொரு காவலருடன் விரட்டி சென்ற ஆய்வாளர் காமராஜ், ராஜாவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதில் நிலை தடுமாறிய ராஜா நடுரோட்டில் மனைவியுடன் கீழே விழுந்தார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் உஷா மீது மோதியது. இதனால் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தப்போக்கும் அதிகமாகி நடுச்சாலையில் உயிருக்கு போராடினார். காதிலிருந்தும் ரத்தம் வழிந்தது. உடனடியாக உஷாவை துவாக்குடியில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

கர்ப்பிணி பெண் உஷாவின் உயிரிழப்பிற்கு  காரணமாகி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்ற ஆய்வாளர் காமராஜ் அதே பகுதியில் கீழே விழுந்து காயம் அடைந்தார்.

அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காவல் ஆய்வாளர் தாக்கியதில் கர்ப்பிணி பலியான சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே மக்கள் ஒன்று திரண்டு காவல்துறைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். நிலைமை மேலும் மோசமானதால் காவல்;துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கையில் இறங்கினர்.

கர்ப்பிணி உயிரிழப்பிற்கு காரணமாக இன்ஸ்பெக்டர் காமராஜை கைது செய்ய உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நள்ளிரவில் திருவெறும்பூர் காவலர்கள் சென்று மருத்;துவமனையில் சிகிச்சை பெற்ற ஆய்வாளர் காமராஜை கைது செய்தனர்.

அவர் மீது 304(2) (உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் தாக்குதல்), 336 (பலத்த காயத்தை ஏற்படுத்துதல்) ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொலை முயற்சி, பாதிக்கப் பட்டவர் பலியானது தொடர்பான வழக்குகள் பின்னர் போடப்படுமா என்ற தகவல் இல்லை.

இன்று காலை 7 மணியளவில் அறங்கூற்றுவர் சகிலா முன்பு அணியப்படுத்தப்பட்டார். அவரை 15நாள்  காவலில் வைக்க அறங்கூற்றுவர் உத்தரவிட்டார். இதையடுத்து ஆய்வாளர் காமராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே ஆய்வாளர் காமராஜை தற்காலிக நீக்கம் செய்து திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் வரதராஜூ இன்று காலை உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதை உஷாவின் உறவினர்கள் ஏற்கவில்லை. இதுபற்றி அவர்கள் கூறியதாவது:

தற்காலிக நீக்கம் என்பது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சமரசம் செய்யும் முயற்சியே தவிர, கர்ப்பிணி பெண் உயிரிழப்பிற்கு காரணமான காமராஜூக்கு தண்டனை வாங்கித்தரும் நடவடிக்கை இல்லை.

நேற்று வரை விபத்து வழக்காகவே இந்த மரணத்தை சித்தரித்த காவல்துறையினர் உஷா மற்றும் அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தைக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆய்வாளர் காமராஜ் மீது இரட்டைக் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். போராட்டத்தில் கலந்து கொண்டு பொது சொத்தை சேதப்படுத்தியாக வழக்குப்பதிவு செய்து கைதாகியுள்ள 23 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும். என்று தெரிவித்தனர். நல்ல தரமான தலைக் கவசமாக இருக்கும் பட்சத்தில், விபத்து ஏற்பட்டால், அதுவும் தலையில் அடிபடுகிற அளவிற்கு ஏற்படுகிற விபத்திலிருந்து உயிர் மட்டும் ஒருவேளை காப்பாற்றப் படலாம். 

அப்படியான தலைக்கவசம் அணியாமல் சென்றதற்கு இரண்டு உயிர்கள் பறிக்கப் பட்டிருக்கின்றன. வாழ்க! இதுபோன்ற சட்ட நிருவாகங்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,720.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.