Show all

தண்ணீர் பிரச்சனை இல்லாத சென்னை! எளிதாக கையாள முடியும் அரசால்.

வேளாண் நிலங்கள் இல்லாத சென்னையில், நீர் நிலைகள் ஏராளமாக இருந்தும், வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்யுக்கு அலைகிற கதையாக சென்னை வாழ் மக்களை அலைகழித்துக் கொண்டிருக்கிறது வீணாய்ப் போன தமிழக அரசு. 

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னையைப் பொறுத்த வரை இதுவரை அரசாங்கத்தின் மூலமாக, நீர் மேலாண்மைக்கு  20,000 கோடிக்கும் மேல் செலவு செய்திருப்பதாக  கணக்கு சொல்லப்படுகிறது. 

தமிழகத்தில் எந்த ஊரிலும் இல்லாத அளவிற்கு சென்னையில் நீர் நிலைகளை உருவாக்கி வந்திருந்திருக்கின்றனர் தமிழக மன்னர்கள். ஆனால் மக்களாட்சியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ஏராளமாக  கட்டிடங்களை கட்டி விட்டோம். போனால் போகட்டும் இருக்கிற நீர்நிலைகளையாவது அரசு பத்திரமாக பாதுகாக்க, பேண முயல்கிறதா வென்றால் அதுதான் இல்லை.

சென்னையின் ஓர் ஆண்டின் நீர்த்தேவை 150கோடி கனஅடிகளாம். தற்போது, சென்னையில் இருக்கும் ஏரிகளை முறையாகப் பராமரித்தால், ஐந்து ஆண்டுகளுக்கு பயன்படும் அளவிற்கு நீரைச் சேமிக்க முடியும் என்று நீர்மேலாண்மை அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். 

தண்ணீர் வரவில்லை, தண்ணீர்ப் பிரச்னை, நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது, பருவமழை பொய்த்துவிட்டது என்று அண்மைக் காலமாக தண்ணீர்ப் பஞ்சம் குறித்து பலரும் பேசிவருகின்றனர். ஆனால், இனி வரும் காலங்களில் இதைத் தவிர்க்க என்னென்ன செய்யலாம் என்ற முயற்சியை கட்சிகளோ, அறக்கட்டளைகளோ, தமிழக அரசோ முயலாமல் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.

இலவசமாகக் கிடைக்கும் தண்ணீருக்காக அதிக அளவில் செலவுசெய்துவருகிறோம். சென்னையின் இந்தாண்டு தண்ணீர் வணிகம் ஆயிரம் கோடியை தாண்டி விட்டது என்கின்றனர் விவரமறிந்தோர். இதுகுறித்து, சென்னையின் நடுத்தட்டு மக்கள் தங்கள் எதிர்கால சேமிப்பிற்கான தொகையை கரைத்து வருவதாக புலம்புகிறார்கள். 

சராசரியாக சென்னைக்கு, ஆண்டுக்கு 1350 மி.மீ மழை கிடைக்கிறது. தேவைக்கு அதிகமான மழை பெய்தாலும், சென்னையில்தான் தண்ணீர்ப் பிரச்னை. தற்போது நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. எனவே, கரைகளைப் பலப்படுத்துதல், ஏரி, குளங்களைத் தூர் வாரி அகலப்படுத்தல் என்று முறையான  பணிகளை மேற்கொள்ளலாம் தமிழக அரசு. வெட்டி அரசியல் செய்து கொண்டு தமிழக மக்களிடம் பெயரைக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, இனி வரும் காலங்களில் தண்ணீர்ப் பிரச்னையை கட்டுப்படுத்த முயலலாம் தமிழக அரசு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,178.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.