Show all

மு.க.ஸ்டாலினுக்கு புது இரத்தம் பாய்ச்சியது! மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள்

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119 பாரதிய ஜனதா கட்சி மீதான கருத்துகளில் மென்மை போக்கை கடைபிடிப்பதாக தம் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் முதல் முறையாக வெளுத்து விளாசியிருக்கிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

கடலூர் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் காட்டிய தீப்பொறி பறக்கும் உக்கிரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் அவரிடம் கருணாநிதி காட்டும் வேகத்தை தொண்டர்களும் பொதுமக்களும் எதிர்பார்த்தனர்.

 

ஜெயலலிதா மறைந்த நிலையில் அதிமுக ஆட்சி கவிழும்; திமுக ஆட்சி அமைக்கும் என மக்களே தங்களிடம் எதிர்பார்ப்பதாக ஸ்டாலின் பல முறை மேடைகளில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் மாற்றமும் நடைபெறவில்லை.

நடுவண் பாஜக அரசு தமிழகம் மீது மக்கள் விரோத திட்டங்களை திணித்த போதுகூட அறிக்கைகளால் கண்டனங்களை வெளியிட்டாரே தவிர கருணாநிதியைப் போல காட்டத்தை காட்டவில்லையே என்கிற பேச்சு இருந்து வந்தது.

இதனால் ஸ்டாலின் மீது விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வந்தன. பாடலாசிரியர் வைரமுத்து விவகாரத்திலும் கூட ஸ்டாலின் மென்மையாக செயல்படுவதாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விவகாரத்தில் விஜயேந்திரருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் ஸ்டாலின்.

அதேபோல பத்மாவத் திரைப்பட விவகாரத்தில் டெல்லி அருகே பள்ளி குழந்தைகள் பயணித்த வாகனம் மீதான தாக்குதலுக்கு தமிழகத்தில் இருந்து முதல் கண்டன குரலை ஸ்டாலின் வெளிப்படுத்தியிருந்தார். அந்தக் கண்டன அறிக்கையில், இந்துத்துவா கும்பலை பயங்கரவாதிகள் என குறிப்பிட்டிருந்தார் ஸ்டாலின்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கடலூரில் நடைபெற்ற திமுகவின் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் உக்கிரத்தை ஸ்டாலின் வெளிப்படுத்தினார். கழகங்கள் இல்லாத தமிழகம் என மூச்சுக்கு முன்னூறு முறை உச்சரித்து சீண்டிக் கொண்டிருக்கும் பாஜகவினரை களவாணி பசங்களா, புறம்போக்குகளா என அனல் கக்கி விமர்சித்தார். இது உடனடி விளைவுகளையும் ஏற்படுத்தியது. ஸ்டாலின் கண்ணியமில்லாமல் பேசிவிட்டார்; ஸ்டாலினே இப்படி பேசலாமா என ஏகத்துக்குமாக விவாதங்களை நடத்தி களைத்து போயுள்ளன தொலைக்காட்சி விவாதங்கள். இதன் உச்சகட்டமாக தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பாஜகவின் ஆசீர்வாதம் ஆச்சாரி, ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் கூட குமுறினார். அதேநேரத்தில் ஸ்டாலின் இந்த ஆவேச பேச்சை ஹிந்துத்துவா எதிர்ப்பாளர்களும் திமுக தொண்டர்களும் ஆரவாரமாக வரவேற்று மகிழ்கின்றனர். இதைத்தான் எதிர்பார்த்தோம்... இப்படித்தான் திமுக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள், குதூகலிக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,680

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.